சின்னவேடம்பட்டி ஏரிக்கு தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை அரசு நிதி கிடைத்தால் பணிகள் முழுமைபெறும் என எதிர்பார்ப்பு
சின்னவேடம்பட்டி ஏரிக்கு தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு நிதி கிடைத்தால் பணிகள் முழுமை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கணபதி,
கோவையை அடுத்த சின்னவேடம்பட்டியில் 200 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. 1984–ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். உத்தரவுப்படி இந்த ஏரி அமைக்கப் பட்டது. இந்த ஏரி சின்னவேடம்பட்டி பகுதியைச் சுற்றியுள்ள உடையாம்பாளையம், வெள்ளக்கிணறு, உருமாண்டம்பாளையம், நல்லாம்பாளையம், சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர வழி செய்கிறது. இந்த ஏரியின் நீர் ஆதாரமாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை உள்ளது. இந்த ஏரிக்கு வரும் மழைநீர் கணுவாய் பகுதியில் தொடங்கி துடியலூர் விஸ்வநாதபுரம் ஆஞ்சசேயர் கோவிலையொட்டி உள்ள வாய்க்கால் வழியாக சின்னவேடம்பட்டி ஏரியை சென்று அடையும்.
ஆனால் இந்த சின்னவேடம்பட்டி ஏரியில் நீர் நிறைந்து 15 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஏனெனில் இந்த ஏரிக்கு நீர் வரும் வழித்தடங்களில் பல்வேறு தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள் குடியிருப்புகள் என ஆக்கிரமிப்புகள் அதிகரித்தும் நீர் வரும் வாய்க்கால்களை சரிவர பராமரிக்க தவறியதாலும் ஏரியில் தண்ணீரை காண தவம் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
மேலும் தமிழக அரசும் இந்த ஏரியை பராமரிக்க கடந்த காலங்களில் போதுமான நடவடிக்கை எதுவும் எடுக்காததால் சின்னவேடம்பட்டி ஏரி சிதிலமடைந்து காணப்படுகிறது. பள்ளம், மேடாக காணப்படும் இந்த ஏரியின் தோற்றம் அப்பகுதி மக்களின் உள்ளங்களில் வேதனையை ஏற்படுத்துகிறது.
இந்த நிலையில் அத்திக்கடவு–கவுசிகா நதி மேம்பாட்டு சங்க செயலாளர் கவுசிகா செல்வராஜ், சிவராஜன், விஜய்பாபு ஆகியோரின் முயற்சியால், கவுமார மடாலய சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகளால் பூமி பூஜையுடன் சின்னவேடம்பட்டி ஏரி சீரமைப்பு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. இதுகுறித்து ஏரி சீரமைப்பு குழுவினர் கூறியதாவது:–
கடந்த சில மாதங்களுக்கு முன் அப்பகுதியை சுற்றியுள்ள ஐ.டி. நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகள், தொழில் நிறுவனங்களை இணைத்து தன்னார்வ குழுவை அமைத்து சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் 250–க்கும் மேற்பட்டோர் இணைந்து ஏரியை சீரமைக்க பணியாற்றி வருகிறார்கள். இந்த ஏரி பாதுகாப்பு குழுவினருடன் பொதுமக்கள் இணைந்து துடியலூரில் இருந்து வெள்ளக்கிணறு வழியாக ராஜவாய்க்காலை தூர்வாரி அகலப்படுத்தியும், ஆழப்படுத்தியும், குப்பைகளை அப்புறப்படுத்தியும் உள்ளனர். மேலும் இந்த ஏரிக்கு தண்ணீர் வரும் வழிப்பாதையில் 30 தடுப்பணைகள் உள்ளன. (இந்த தடுப்பணைகள் என்பது தண்ணீர் தேங்கி பின்னர் இறங்கி வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளாகும்.
தடுப்பணைகளை தற்போது இருக்கும் அளவைவிட மேலும் 2 அடிக்கு கீழே இறக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் ஏரியில் திடீரென்று நீரின் அளவு அதிகரிக்கும்போது அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் செல்லாது. மேலும் ஏரிக்கு வரும் நீர்வரத்தும் குறையாது. தற்போது மற்ற ராஜவாய்க்கால்களில் நீர்வரத்து தொடர்ந்து 15 நாட்களாக வரும்போது, சின்னவேடம்பட்டி ஏரிக்கு நீர்வரத்து 18 மணிநேரம் மட்டுமே வருகிறது.
இதனால் ஏரிக்கு நீர் வரும் வழிகளை சீர்படுத்த வேண்டி உள்ளது. இதுவரை ரூ.15 லட்சம் மதிப்பில் நீர்வரும் வாய்க்கால்களில் சீரமைப்பு பணிகள் ஓரளவு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தற்போது ஏரியின் ஆழம் 25 அடியாக உள்ளது.
இந்தநிலையில் பருவமழைக்காலம் தொடங்கிவிட்டதால் மாநில அரசின் கவனம் செலுத்தி நிதி ஒதுக்கீடு செய்தால், ஏரி சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிக்கப்படும். நாங்கள் இதுவரை ஏரியை சுற்றி சுமார் 200 மரக்கன்றுகளை நட்டு, அதற்கு சொட்டுநீர் பாசன வசதியையும் ஏற்படுத்தி உள்ளோம். மேலும் 2 ஆயிரம் மரக்கன்றுகளை நட முயற்சி எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த ஏரியில் 84 வகையான பறவையினங்கள் வாழ்ந்து வருவதாக வன உயிரின கணக்கெடுப்பின்படி தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த உயிரினங்களை காக்கும் விதமாகவும், பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்தும் விதமாகவும் “உயிர்வேலி“ அமைக்கப்படுகிறது. இந்த உயிர்வேலி அமைக்க இழுவை, கள்ளி மர வகைகளை நட வேண்டும்.
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீரும், கணுவாய், பன்னிமடை, துடியலூர், வெள்ளக்கிணறு ஆகிய ஊர்களில் பெய்யும் மழைநீரும் இந்த ஏரிக்கு வரும் வகையில் மீட்பு பணிகள் செய்யப்பட்டு உள்ளது.
வானிலை ஆராய்ச்சியாளர்கள் இந்த வருடம் நல்ல மழை பெய்யும் என தெரிவித்து உள்ளனர். எனவே சின்னவேடம்பட்டி ஏரியில் நீர் நிறைந்து காணப்பட்டதை பார்த்த ஒருதலைமுறை கடந்துவிட்ட நிலையில் இந்த தலைமுறையினர் சின்னவேடம்பட்டி ஏரியில் நீர் நிரம்பி பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.