பாதாள சாக்கடை இணைப்புக்கு அதிக கட்டணம்: உழவர்கரை நகராட்சி அலுவலகத்தை பா.ஜனதாவினர் முற்றுகை
பாதாள சாக்கடை இணைப்புக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி பாரதீய ஜனதா கட்சியினர் உழவர்கரை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
புதுச்சேரி,
புதுவையில் பாதாள சாக்கடை திட்டத்துக்கான குழாய்கள் பதிக்கப்பட்டு இப்போது வீடுகளில் இருந்து இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. லாஸ்பேட்டை பகுதியில் இணைப்பு கொடுக்க ஒப்பந்ததாரர்கள் ரூ.20 ஆயிரம் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.
இதைக்கண்டித்து பாரதீய ஜனதா கட்சியினர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொகுதி தலைவர் சந்துரு தலைமை தாங்கினார். போராட்டம் குறித்து கேள்விப்பட்டதும் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., பொதுச்செயலாளர் தங்க.விக்ரமன் மற்றும் நிர்வாகிகள் விரைந்து வந்தனர்.
அவர்கள் இணைப்பு கட்டணம் சம்பந்தமாக நகராட்சி ஆணையரை சந்திக்க திட்டமிட்டனர். ஆனால் அங்கு அவர் இல்லை. இதைத்தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது பாதாள சாக்கடை இணைப்பு கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சியினர் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.