போலி ஏ.டி.எம். கார்டு மோசடி வழக்கில் எம்.எல்.ஏ.க்களுக்கு தொடர்பு பாரதீய ஜனதா குற்றச்சாட்டு


போலி ஏ.டி.எம். கார்டு மோசடி வழக்கில் எம்.எல்.ஏ.க்களுக்கு தொடர்பு பாரதீய ஜனதா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 21 Jun 2018 4:15 AM IST (Updated: 21 Jun 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

போலி ஏ.டி.எம். கார்டு மோசடி வழக்கில் எம்.எல்.ஏ.க்களுக்கு தொடர்பு உள்ளதாக பாரதீய ஜனதா குற்றஞ்சாட்டியுள்ளது.

புதுச்சேரி,

பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுச்சேரியில் நிர்வாக சீர்கேடு காரணமாக அரசு நிர்வாகத்தில் மந்த நிலை நீடிக்கிறது. சட்டம் ஒழுங்கு மோசமடைந்து உள்ளது. தினமும் கொலை, கொள்ளை, லஞ்சம் என அலங்கோல ஆட்சி நடக்கிறது. மக்கள் வேதனையோடு இந்த ஆட்சி எப்போது மாறும் என ஏங்குகிறார்கள். தங்களது இயலாமையை மூடிமறைத்து மக்களின் கவனத்தை திசை திருப்ப முதல்–அமைச்சர் நாராயணசாமி அனைத்துக்கட்சி கூட்டம் என்ற பெயரில் பழியை மத்திய அரசின் மீது திருப்ப முயற்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

பாரதீய ஜனதா கட்சி பதவி சுகம், கட்சி நலன் என்பதை விட மக்களின் நலனில்தான் முக்கியம் செலுத்தும். அதனால்தான் தேசத்தை காக்க ஜம்மு காஷ்மீரில் பதவியை விட்டுக்கொடுத்துள்ளது. தேசத்துக்காக எதையும் இழக்க தயாராக உள்ள கட்சிதான் பாரதீய ஜனதா.

புதுவை மாநிலத்தின் பட்ஜெட் தொகை ரூ.7,530 கோடிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் ஸ்மார்ட்சிட்டி திட்டத்துக்கு ரூ.1,850 கோடி, குடிநீர் பராமரிப்புக்கு ரூ.500 கோடி, ஜிப்மர் விரிவாக்கத்துக்கு ரூ.1,000 கோடி என பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எனவே மத்திய அரசை குறைகூறுவதை முதல்–அமைச்சர் நாராயணசாமி நிறுத்திக்கொள்ளவேண்டும்.

2019 தேர்தலுக்கு பின்னர் பாரதீய ஜனதா கட்சியை தேட வேண்டியதிருக்கும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். 2019 தேர்தலுக்குப்பின் காங்கிரஸ் கட்சி இருக்குமா? என்ற சந்தேகம் உள்ளது. பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி 5–வது இடத்தில் உள்ளது. பல்வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்கள்தான் காங்கிரஸ் கட்சியில் உள்ளனர். அந்த கட்சியில் இப்போது பதவியில் இருக்கும் ஒரிஜினலான காங்கிரஸ்காரர்கள் யார்? என்பதை அவர்களால் சொல்ல முடியுமா?

நாங்கள் கொள்கையின் அடிப்படையில் தேர்தலில் போட்டியிட்டோம். அவர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்து எம்.எல்.ஏ. பதவியை பெற்றுள்ளனர். அவர்களால் எங்களைப்போல் கொள்கையை முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிட முடியுமா? முதல்–அமைச்சர் நாராயணசாமியை எதிர்த்து போட்டியிட நான் தயாராக உள்ளேன். அவர் பைசாகூட செலவு செய்யாமல் தேர்தலில் நிற்க தயாரா?

ஏ.டி.எம். மோசடி கும்பலுக்கும், முதல்–அமைச்சர் நாராயணசாமிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதனால்தான் அந்த வழக்கினை சி.பி.ஐ.க்கு மாற்ற மறுத்துவருகிறார். அந்த வழக்கின் பிரதான குற்றவாளி ஒரு எம்.எல்.ஏ.வுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் 4 காசோலைகளை வழங்கியுள்ளார். மற்றொரு எம்.எல்.ஏ.வுக்கு ரூ.50 லட்சம் பணப்பரிமாற்றம் அவரது வங்கிக்கணக்கில் இருந்து செய்துள்ளார். ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.

இவ்வாறு சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.


Next Story