இரியூர் அருகே நின்ற லாரி மீது கார் மோதல் தமிழகத்தை சேர்ந்த 5 வாலிபர்கள் சாவு
இரியூர் அருகே நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிக்கமகளூரு,
இரியூர் அருகே நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் கோவாவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு ஊருக்கு திரும்பும் வழியில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
5 பேர் பலிசித்ரதுர்கா மாவட்டம் இரியூர் தாலுகா ஜாவகொண்டனஹள்ளி அருகே நேற்று அதிகாலை நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியது. இதில் கார் முழுவதும் உருக்குலைந்துபோனது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த 4 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் 5 பேர் படுகாயமடைந்து ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்த இரியூர் புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள், அந்தப் பகுதி பொதுமக்களுடன் சேர்ந்து படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு சித்ரதுர்கா மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான 4 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
படுகாயமடைந்த 5 பேருக்கும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிகிச்சை பலன் அளிக்காமல் ஒருவர் பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. மேலும் சிகிச்சை பெற்று வருபவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
தமிழகத்தை சேர்ந்தவர்கள்விபத்து பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், பலியானவர்கள் தமிழ்நாடு வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த சதாம் உசேன்(வயது 22), சதாம்(21), சாரூக்(20), தவுசிப் அகமது(20), ஆசீப் முகம்மது (20) ஆகியோர் என்பதும், மேலும் இவர்களுடன் சென்ற 4 பேரும் படுகாயமடைந்ததும் தெரியவந்தது. இவர்கள் 9 பேரும் கோவா மாநிலத்திற்கு சுற்றுலா சென்றதும், அங்கு சுற்றுலா தலங்களை சுற்றிபார்த்து விட்டு ஊருக்கு திரும்பும் வழியில் விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது.
இந்த விபத்து குறித்து இரியூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கோவாவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு ஊருக்கு திரும்பும் வழியில் விபத்தில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.