சட்டத்திற்கு உட்பட்டு டி.கே.சிவக்குமார் பக்கம் நிற்போம் முதல்–மந்திரி குமாரசாமி பேட்டி


சட்டத்திற்கு உட்பட்டு டி.கே.சிவக்குமார் பக்கம் நிற்போம் முதல்–மந்திரி குமாரசாமி பேட்டி
x
தினத்தந்தி 21 Jun 2018 3:30 AM IST (Updated: 21 Jun 2018 2:58 AM IST)
t-max-icont-min-icon

சட்டத்திற்கு உட்பட்டு டி.கே.சிவக்குமாரின் பக்கம் நிற்போம் என்று முதல்–மந்திரி குமாரசாமி கூறினார்.

பெங்களூரு, 

சட்டத்திற்கு உட்பட்டு டி.கே.சிவக்குமாரின் பக்கம் நிற்போம் என்று முதல்–மந்திரி குமாரசாமி கூறினார்.

பழிவாங்கும் போக்கில்...

வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு நோட்டீஸ் வந்துள்ளது. இதுகுறித்து முதல்–மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–

சட்டத்திற்கு உட்பட்டு மந்திரி டி.கே.சிவக்குமார் பக்கம் நாங்கள் நிற்போம். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் யாருடைய நெருக்கடிக்கும் பணியாமல், பழிவாங்கும் போக்கில் செயல்படாமல் நேர்மையான முறையில் பணியாற்ற வேண்டியது அவசியம். டி.கே.சிவக்குமார் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜனதாவினர் கூறுகிறார்கள்.

சட்டப்படி எதிர்கொள்வார்

அவர் எதற்காக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்?. சட்டப்படி அவர் இதை எதிர்கொள்வார். அதற்கு அவருக்கு சட்டத்தில் இடம் உள்ளது. இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வந்தபோது, பா.ஜனதாவினர் எத்தனை பேர் மந்திரி பதவியை ராஜினாமா செய்தனர்?. பா.ஜனதாவினர் கேட்கிறார்கள் என்பதற்காக அவர் ராஜினாமா செய்ய மாட்டார். டி.கே.சிவக்குமார் எப்போது நினைக்கிறாரோ அப்போது பதவியை ராஜினாமா செய்வார்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

முன்னதாக தேவேகவுடாவை பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள அவருடைய இல்லத்தில் குமாரசாமி சந்தித்து பேசினார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் வி‌ஷயத்திலோ அல்லது மந்திரி டி.கே.சிவக்குமார் வி‌ஷயத்திலோ தேவை இல்லாமல் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று குமாரசாமிக்கு தேவேகவுடா அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த வி‌ஷயத்தில் பா.ஜனதாவுக்கு எதிராகவோ அல்லது ஆதரவாகவோ கருத்துகளை கூற வேண்டாம் என்றும் தேவேகவுடா, குமாரசாமியிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story