ஸ்ரீவைகுண்டம் அருகே குளத்தை தூர்வாரும் பணி கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்
ஸ்ரீவைகுண்டம் அருகே ஸ்ரீமூலக்கரை கஸ்பா குளத்தை தூர்வாரும் பணியை கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.
ஸ்ரீவைகுண்டம்,
ஸ்ரீவைகுண்டம் அருகே ஸ்ரீமூலக்கரை கஸ்பா குளத்தை தூர்வாரும் பணியை கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.
குளம் தூர்வாரும் பணிதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களையும் தூர்வாரி, கரையை பலப்படுத்த மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார். அதன்படி, குளங்களை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. ஸ்ரீவைகுண்டம் அருகே ஸ்ரீமூலக்கரை கஸ்பா குளம் 433 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன்மூலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
ஸ்ரீவைகுண்டம் கஸ்பா குளத்தை அண்ணா பல்கலைக்கழக நிதி உதவியுடன் தூர்வாரும் பணி தொடங்கியது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, குளத்தை தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். குளத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்கள், புதர் செடிகளை 3 பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றும் பணி நடந்தது.
பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:–
நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த...தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களையும் தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் குளங்களை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. ஸ்ரீமூலக்கரை கஸ்பா குளத்தில் அதிகளவு தண்ணீரை சேமிக்கும் வகையில், முழுவதுமாக தூர்வாரப்படும். குளத்தின் மதகுகளும் சீரமைக்கப்படும்.
தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்தை ரூ.11 கோடி செலவில் தூர்வார பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. கோடை காலத்தில் தண்ணீரை சேமித்து வைக்கவும், விவசாயிகள் பயன்பெறும் வகையிலும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் குளங்களை தூர்வாரும் பணி தொடர்ந்து நடைபெறும்.
இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
தூத்துக்குடி உதவி கலெக்டர் பிரசாந்த், அண்ணா பல்கலைக்கழக நெல்லை மண்டல டீன் சக்திநாதன், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயஸ் அருள், வருவாய் ஆய்வாளர் பாண்டியராஜன், ஸ்ரீவைகுண்டம் வியாபாரிகள் சங்க தலைவர் காளியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஸ்ரீவைகுண்டம் அருகே கஸ்பா குளத்தில் தூர்வாரும் பணியை உதவி கலெக்டர் பிரசாந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.