தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 800 டன் கந்தக அமிலம் அகற்றம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 800 டன் கந்தக அமிலம் அகற்றம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 22 Jun 2018 3:00 AM IST (Updated: 22 Jun 2018 12:14 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 800 டன் கந்தக அமிலம் அகற்றப்பட்டு உள்ளது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 800 டன் கந்தக அமிலம் அகற்றப்பட்டு உள்ளது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு ‘சீல்‘ வைப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மாதம் 22–ந் தேதி நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து கடந்த மாதம் 28–ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூட உத்தரவிட்டது. அதன்படி அந்த ஆலை மூடி ‘சீல்‘ வைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆலையில் சேமித்து வைக்கப்பட்டு இருந்த கந்தக அமிலம் கன்டெய்னரில் கசிவு ஏற்பட்டது. இதனால் கந்தக அமிலத்தை ஆலையில் இருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி கடந்த 18–ந் தேதி முதல் டேங்கர் லாரிகள் மூலம் கந்தக அமிலம் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களாக இரவு, பகலாக கந்தக அமிலம் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணி நேற்று 4–வது நாளாக நீடித்தது. நேற்று ஏராளமான டேங்கர் லாரிகளில் கந்தக அமிலங்கள் ஏற்றப்பட்டன.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:–

800 டன் அகற்றம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கந்தக அமிலம் சேமிப்பு கன்டெய்னரில் ஏற்பட்ட கசிவு கண்டறியப்பட்டு, கந்தக அமிலம் வெளியேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாசுகட்டுப்பாட்டு வாரியம், தொழிற்சாலைகள் ஆய்வாளர், போலீஸ் துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறையை சேர்ந்த அதிகாரிகள் தலைமையில் இந்த பணி நடந்து வருகிறது. இதுவரை 40 டேங்கர் லாரிகள் மூலம் 800 டன் கந்தக அமிலம் முழுமையாக வெளியேற்றப்பட்டு உள்ளது.

இன்று (நேற்று) காலையில் 5 டேங்கர் லாரிகளில் கந்தக அமிலம் ஏற்றப்பட்டு வருகிறது. அங்கு உள்ள கந்தக அமிலம் 100 சதவீதம் அப்புறப்படுத்தும் வரை இந்த பணிகள் தொடர்ந்து நடைபெறும். ஒரு நாளைக்கு 25 டேங்கர் லாரிகளில் அமிலம் ஏற்றப்பட்டால் விரைவில் பணி முடிக்கப்பட்டுவிடும். கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களில் கந்தக அமிலத்தை மூலப்பொருளாக கொண்டு செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளுக்கு இந்த அமிலம் கொண்டு செல்லப்படுகின்றன.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.


Next Story