ஜனநாயகத்திற்கு விரோதமாக அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க மாட்டோம் மு.க.ஸ்டாலின் பேச்சு


ஜனநாயகத்திற்கு விரோதமாக அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க மாட்டோம் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 22 Jun 2018 4:45 AM IST (Updated: 22 Jun 2018 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஜனநாயகத்திற்கு விரோதமாக அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க மாட்டோம் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

திருச்சி,

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில், தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமை பிரிவின் மாநில நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:-

2006 முதல் 2011-ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆதரவோடு தி.மு.க. ஆட்சி நடைபெற்றதால், அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த ஜெயலலிதா நமது ஆட்சியை மைனாரிட்டி அரசு என்று, தான் பேசும்போது எல்லாம் குறிப்பிட்டார். ஆனால் அந்த ஆட்சியை தலைவர் கருணாநிதி ஐந்தாண்டுகள் முழுமையாக நடத்தியதோடு, இது மைனாரிட்டிகள் (சிறுபான்மையினர்) நடத்தும் ஆட்சி தான் என்று பல முறை கூறி இருக்கிறார்.

தி.மு.க. பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சிறுபான்மையினருக்கு உரிய அங்கீகாரங்களை எப்போதுமே வழங்க தவறியது இல்லை.

ஆனால் இன்று தமிழகத்தின் நிலை என்ன? மத்தியில் மத வெறிபிடித்த, தமிழ்மொழிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. நீட் தேர்வினால் ஏழை, எளிய வீட்டு பிள்ளைகள் மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை. பிளஸ்-2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தும், டாக்டராக முடியாமல் போய்விட்டதே என்ற ஏக்கத்தில் தமிழகத்தில் நான்கைந்து மாணவிகள் தங்களது உயிரை மாய்த்து இருக்கிறார்கள்.

இதுபற்றி எல்லாம் மத்திய அரசு கவலைப்படவில்லை. இதனை தட்டிக்கேட்க கூடிய நிலையில், இங்குள்ள எடப்பாடி பழனிசாமி அரசும் இல்லை. எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாட்டை பற்றியும், தமிழக மக்களை பற்றியும் கிஞ்சிற்றும் கவலை இல்லை.

ஸ்டாலின் நினைத்தால் ஆட்சியை பிடித்து விடலாம் என்று படிக்காதவர்கள் மட்டுமல்ல, நன்கு படித்தவர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், நீதிபதிகள் கூட பேசுகிறார்கள். நடைபயிற்சி செல்லும் போது கூட, என்னிடம் இந்த ஆட்சியை முடிக்க மாட்டீர்களா? என்று கேட்கிறார்கள். இதை எல்லாம் தாண்டி, கருணாநிதி நன்றாக இருந்திருந்தால் இப்படி விட்டு வைத்திருப்பாரா? என்றெல்லாம் பேசுகிறார்கள். அவர்களுக்கு நான் பலமுறை பதில் அளித்து விட்டேன். ஈரோடு மண்டல மாநாட்டிலும் நீண்ட விளக்கத்தை அளித்தேன்.

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அந்த கட்சியில் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு ஒரு மனமாற்றம் வந்திருக்க வேண்டும். அப்படி வரவிடாமல் ஒப்பந்தத்தில் தொடங்கி, எல்லாவற்றிலும் எம்.எல்.ஏ.க்களுக்கு கமிஷன் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் மாதம் ரூ.4 கோடி முதல் 10 கோடி வரை பெறுகிறார்கள். அந்த பணத்தில் ஓட்டல் உள்பட பலவற்றை வாங்குகிறார்கள்.

இதுபற்றி எல்லாம் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் விசாரணை நடத்தப்படும். அப்போது எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து அமைச்சர்களும் சிறைக்குப்போக தான் போகிறார்கள். தமிழகத்தில் நீதி தடுமாறுகிறது. அதனால் தான் ஒரே வழக்கிற்கு இரு தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதனை நாம் கூறவில்லை. ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரே கூறி இருக்கிறார்.

நாம் அப்படி செய்யப்போவது இல்லை, ஒரு பேச்சுக்கு 10 எம்.எல்.ஏ.க்களை விலை கொடுத்து வாங்குகிறோம் என வைத்துக்கொண்டால் கூட அவர்களுக்கு நாம் மாமூல் கொடுக்கவேண்டும். அப்படி ஒரு ஆட்சி அமைத்தால் மக்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள். எனவே தான் அப்படி ஒரு முடிவுக்கு நாம் வரவில்லை. தற்போது ஆட்சியில் இல்லாவிட்டாலும் நாம் தான் ஆளுங்கட்சி என மக்கள் நினைக்கிறார்கள். அவர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் தி.மு.க. ஜனநாயக வழியில் தான் செயல்படும்.

தி.மு.க. எந்த ஒரு கால கட்டத்திலும் யார் ஆட்சியையும் கவிழ்த்தது இல்லை. இது தான் வரலாறு. நெருக்கடி காலத்தின்போது ஆதரவு கொடுக்கவில்லை என்ற காரணத்திற்காக தி.மு.க. ஆட்சியை அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி கலைத்தார். எங்களுக்கு பதவி முக்கியம் அல்ல, ஜனநாயகம் தான் முக்கியம் என்று அப்போது கருணாநிதி சொன்னதால் ஆட்சியை இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. நாங்கள் எல்லாம் மிசா கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டோம்.

இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும், தி.மு.க ஆட்சி அமைய வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். அவர்களது விருப்பத்தின்படி நம்பிக்கைக்கு பாத்திரமான ஆட்சியை நாம் அமைக்கவேண்டும். அதற்கான நிலையை உருவாக்க இந்த கூட்டத்தில் உறுதி எடுத்துக்கொள்ளவேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். 

Next Story