கோவில்பட்டி பள்ளிக்கூடத்தில் மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் ஆசிரியர்கள் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு
ஆசிரியர்கள் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவில்பட்டி பள்ளிக்கூடத்தில் மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி,
ஆசிரியர்கள் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவில்பட்டி பள்ளிக்கூடத்தில் மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர்கள் இடமாற்றம்கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் சுமார் 2 ஆயிரத்து 100 மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 6 முதல் 12–ம் வகுப்பு வரையிலான மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு 74 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பள்ளிக்கூடத்தில் 40 மாணவிகளுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படுகிறது.
இந்த நிலையில் பள்ளிக்கூடத்தில் சமூக அறிவியல் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் அனிதா, பிரேமா, ஸ்டெல்லா ஆகிய 3 பேரும் உபரி பணியிடங்களில் பணியாற்றுவதாக கூறி, அவர்கள் 3 பேரையும் வேறு பள்ளிக்கூடங்களுக்கு இடமாற்றம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மனோகரன் உத்தரவிட்டார்.
உள்ளிருப்பு போராட்டம்ஆசிரியர்கள் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று காலையில் மாணவிகள் வகுப்புகளுக்கு செல்லாமல், பள்ளிக்கூட வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் மேரி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படாவில்லை.
பின்னர் கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் (பொறுப்பு) சீனிவாசன், பள்ளி துணை ஆய்வாளர் செல்லகுருசாமி, அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லாபாய் ஆகியோர் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அதிகாரிகள் கூறுகையில், இடமாற்றம் செய்யப்பட்ட 3 ஆசிரியர்களையும் மீண்டும் அதே பள்ளியில் நியமிக்க பரிசீலனை செய்வதாக தெரிவித்தனர். இதையடுத்து காலை 10.45 மணி அளவில் மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர்.