கோவில்பட்டி அருகே பூ வியாபாரி மர்மச்சாவு போலீசார் விசாரணை


கோவில்பட்டி அருகே பூ வியாபாரி மர்மச்சாவு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 22 Jun 2018 2:30 AM IST (Updated: 22 Jun 2018 12:36 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே பூ வியாபாரி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி அருகே பூ வியாபாரி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூ வியாபாரி

கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் அலங்காரம் (வயது 50). இவர் பூ வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி செல்லம்மாள். இவர்களுடைய மகன் வைரமுத்து (25). செல்லம்மாள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். எனவே அலங்காரம் தன்னுடைய மகனுடன் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் அலங்காரம் தனது வீட்டில் இருந்து பூ வியாபாரத்துக்கு புறப்பட்டு சென்றார். அவர், கோவில்பட்டி மார்க்கெட்டில் இருந்து பூக்களை மொத்தமாக வாங்கி சென்று, கோவில்பட்டியை அடுத்த பாண்டவர்மங்கலம் பகுதியில் வைத்து பூக்களை கட்டினார். பின்னர் அவர் பாண்டவர்மங்கலம், செண்பகபேரி உள்ளிட்ட பகுதிகளில் சைக்கிளில் சென்று பூ வியாபாரம் செய்தார்.

மர்மச்சாவு

பின்னர் மாலையில் அலங்காரம் தனது வீட்டுக்கு திரும்பி செல்லவில்லை. எனவே நேற்று காலையில் வைரமுத்து தன்னுடைய தந்தையை தேடிச் சென்றார். அப்போது கோவில்பட்டியை அடுத்த செண்பகபேரியில் ஊருக்கு ஒதுக்குப்புறமான கிணற்றின் அருகில் அலங்காரம் மர்மமான முறையில் தலையில் ரத்தக்காயத்துடன் அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். அவர் அணிந்து இருந்த லுங்கி, ஜட்டி கழட்டப்பட்ட நிலையில் இருந்தது. இதனைப் பார்த்து வைரமுத்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்துலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மர்மமான முறையில் இறந்த அலங்காரத்தின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காரணம் என்ன?

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அலங்காரம் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இயற்கை உபாதையை கழிக்க சென்றபோது, அவரை மர்மநபர்கள் யாரேனும் அடித்துக் கொலை செய்தனரா? அல்லது அவரது சாவில் வேறு ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில்பட்டி அருகே பூ வியாபாரி மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story