கோவில்பட்டி அருகே தூக்க மாத்திரைகள் தின்று வயதான தம்பதி தற்கொலை
கோவில்பட்டி அருகே உடல் நலக்குறைவால் தூக்க மாத்திரைகள் தின்று வயதான தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி அருகே உடல் நலக்குறைவால் தூக்க மாத்திரைகள் தின்று வயதான தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.
பெட்டிக்கடைக்காரர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள உருளைகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் சோலையப்பன் (வயது 70). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி பூரணம்மாள் (67). இவர்களுக்கு 4 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி, வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.
எனவே சோலையப்பன், பூரணம்மாள் ஆகிய 2 பேரும் தங்களது வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் சோலையப்பனுக்கு தலையில் கட்டி இருந்ததால், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். பூரணம்மாளுக்கு ஏற்கனவே 2 முறை மாரடைப்பு ஏற்பட்டது. எனவே அவரும் அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
மாத்திரைகளை தின்று...
இந்த நிலையில் முதுமை மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு சென்று வந்ததால் சோலையப்பன், பூரணம்மாள் ஆகிய 2 பேரும் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இருந்தனர். இதனால் வயதான தம்பதியான இருவரும் தற்கொலை செய்து கொள்வது என முடிவு செய்தனர். அதன்படி, நேற்று முன்தினம் அவர்கள் 2 பேரும் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை தின்று மயங்கிக்கிடந்தனர். மாலையில் நீண்ட நேரமாகியும் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால், அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது சோலையப்பன், பூரணம்மாள் ஆகிய 2 பேரும் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்கள்.
சாவு
உடனே அவர்கள் 2 பேரையும் மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறிதுநேரத்தில் பூரணம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இரவில் சோலையப்பனும் இறந்தார்.
இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். முதுமை மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக வயதான தம்பதி தூக்க மாத்திரைகள் தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவில்பட்டியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.