அரசு பள்ளியில் ஆசிரியர்களை பணியிடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு: பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள்- கிராம மக்கள் திடீர் போராட்டம்
கள்ளக்குறிச்சி அருகே அரசு பள்ளியில் ஆசிரியர்களை பணியிடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு பஸ்சை மாணவர்கள், கிராம மக்கள் சிறைபிடித்து திடீர் போராட்டம் செய்தனர்.
கண்டாச்சிமங்கலம்,
கள்ளக்குறிச்சி அருகே சித்தலூர் கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையில் மொத்தம் 240 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 10 ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டது. ஆனால் 7 ஆசிரியர்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்பட்டனர். இதன் மூலம் தலைமை ஆசிரியருக்கான பணியிடத்துடன் சேர்த்து 3 இடங்கள் காலியாக இருந்தது. இதனால் குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியர்களை கொண்டே பள்ளி இயங்கி வந்தது.
இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி விழுப்புரத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்த கலந்தாய்வின் மூலம் இந்த பள்ளியை சேர்ந்த 2 ஆசிரியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். ஏற்கனவே ஆசிரியர்கள் பற்றாக்குறையில் இயங்கி வந்த பள்ளியில் இருந்து மேலும் 2 ஆசிரியர்களை இடமாற்றம் செய்து இருப்பது மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் நிலை ஏற்பட்டது.
நேற்று காலை வழக்கம் போல் மாணவ, மாணவிகள் அனைவரும் பள்ளிக்கு வந்தனர். தொடர்ந்து அவர்கள் வகுப்பறைக்குள் செல்லாமல், அனைவரும் பள்ளியை விட்டு வெளியே வந்து கிராம மக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கொட்டையூரில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து அவர்கள் போராட்டம் செய்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்கள் ஏற்கனவே இங்கு ஆசிரியர் பற்றாக்குறை இருந்தது. இந்த நிலையில் இங்கிருந்து மேலும் 2 ஆசிரியர்களை இடமாற்றம் செய்து இருப்பதால், எங்களது கல்வி பாதிக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.
குறைந்த அளவிலான ஆசிரியர்கள் எப்படி எங்களுக்கு பாடங்களை எடுக்க முடியும். இதனால் எங்களது கல்வி பெரிய அளவில் பாதிக்கும், அதோடு எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வு எழுதும் மாணவர்களின் எதிர்காலமும் பாழாகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. எனவே மாணவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்களை பணிஇடமாற்றம் செய்ய கூடாது, காலியாக உள்ள பணியிடத்தில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், அப்போது தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த பிரச்சினைக்கு பஸ்சை சிறைபிடித்து போராடுவது என்பது சரியான தீர்வாக இருக்காது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுக்குமாறும் மாணவர்கள் மற்றும் கிராம மக்களிடம் போலீசார் அறிவுறுத்தினர். இதையடுத்து கிராம மக்களும், மாணவர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தின் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன், பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story