டி.டி.வி.தினகரன் வரவேற்பு பேனர்கள் அகற்றம் நெல்லையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் சாலை மறியல்
டி.டி.வி.தினகரனை வரவேற்று வைக்கப்பட்டு இருந்த வரவேற்பு பேனர்களை போலீசார் அகற்றியதைக் கண்டித்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
நெல்லையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை வரவேற்று வைக்கப்பட்டு இருந்த வரவேற்பு பேனர்களை போலீசார் அகற்றியதைக் கண்டித்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டி.டி.வி.தினகரன் வரவேற்பு பேனர்கள்நெல்லை மாவட்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நேற்று நெல்லை வந்தார். அவரை வரவேற்கும் வகையில், அந்த கட்சியினர், நெல்லை மாநகராட்சியிடம் அனுமதி பெற்று, நெல்லை மாநகரம் முழுவதும் டிஜிட்டல் பேனர்களை வைத்து இருந்தனர்.
இந்த நிலையில் அந்த டிஜிட்டல் பேனர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி, நெல்லை மாநகர போலீசார் நேற்று காலையில் அவற்றை அகற்ற தொடங்கினர். மேலப்பாளையம் தெற்கு புறவழிச்சாலையில் இருந்து தச்சநல்லூர் வடக்கு புறவழிச்சாலை வரையிலும் இருந்த டிஜிட்டல் பேனர்களை போலீசார் அகற்றியவாறு சென்றனர்.
சாலை மறியல்இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மாவட்ட செயலாளர் கல்லூர் வேலாயுதம் தலைமையில், நெல்லை பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அருகில் திரண்டு சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
உடனே நெல்லை மாநகர உதவி போலீஸ் கமிஷனர் கிருஷ்ணசாமி, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அதிகாரிகள் கூறுகையில், நெல்லையில் டி.டி.வி.தினகரன் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி முடியும் வரையிலும் டிஜிட்டல் பேனர்கள் இருக்கலாம். நிகழ்ச்சி முடிந்தவுடன் பேனர்களை அகற்ற வேண்டும் என்று தெரிவித்தனர். இதையடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.