ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்


ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Jun 2018 4:15 AM IST (Updated: 22 Jun 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வில் 8 மாவட்டத்திற்கு மட்டும் மாறுதல் வழங்கப்படும் என்ற அறிவிப்பை கண்டித்து சிவகங்கையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை,

தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் மாறுதலுக்கான கலந்தாய்வு தற்போது தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய 8 மாவட்டங்களுக்கு மட்டுமே மாவட்ட மாறுதல் வழங்கப்படும் என்று கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனால் மற்ற மாவட்டங்களுக்கு மாறுதல் வேண்டி விண்ணப்பித்த ஆசிரியர்கள் அதிர்ச்சிஅடைந்தனர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சிவகங்கையில் கலந்தாய்வு நடைபெற்ற வளாகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமையில் மற்ற மாவட்ட காலிப்பணியிடங்களை வெளிப்படையாக அறிவித்து கலந்தாய்வு நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் ரவி, ஜெயக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆரோக்கியராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story