வெளிப்படையாக கலந்தாய்வு நடத்தக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்


வெளிப்படையாக கலந்தாய்வு நடத்தக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 22 Jun 2018 4:30 AM IST (Updated: 22 Jun 2018 1:35 AM IST)
t-max-icont-min-icon

வெளிப்படையாக கலந்தாய்வு நடத்தக்கோரி, புதுக்கோட்டையில் கலந்தாய்வு நடைபெற்ற பள்ளியில் இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை,

தமிழகம் முழுவதும் இந்த ஆண்டுக்கான ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதேபோல் புதுக்கோட்டையிலும் பொதுமாறுதல் கலந்தாய்வு தொடங்கி நடைபெற்றது வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டையில் உள்ள தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நேற்று இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக இடைநிலை ஆசிரியர்கள் நேற்று காலை முதல் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் குவிந்தனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், வேலூர், திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் பெற முடியாது எனவும், மேலும் தமிழகம் முழுவதும் உள்ள மற்ற மாவட்டங்களில் இருந்து இந்த 8 மாவட்டங்களுக்கு மட்டும் மாறுதல் பெற முடியும் எனவும் இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.

இதனால் சொந்த மாவட்டங்களுக்கு இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் வாங்கி செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதை கண்டித்தும், வெளிப்படையாக கலந்தாய்வு நடத்த வலியுறுத்தியும் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் ஜீவன்ராஜ் தலைமை தாங்கினார். உள்ளிருப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள், குறிப்பிட்ட 8 மாவட்டங்களுக்கு மட்டும் மாறுதல் பெற முடியும் என்று இயக்குனர் உத்தரவிட்டு உள்ளதை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் நேற்று தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணிக்காக கணேஷ்நகர் போலீசார் குவிக்கப்பட்டனர். 

Next Story