மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி கலெக்டர் அன்பழகன் தொடங்கி வைத்தார்


மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி கலெக்டர் அன்பழகன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 22 Jun 2018 4:15 AM IST (Updated: 22 Jun 2018 1:40 AM IST)
t-max-icont-min-icon

மாணவ-மாணவிகளுக்கான யோகா பயிற்சியை மாவட்ட கலெக்டர் அன்பழகன் தொடங்கி வைத்தார்.

கரூர்,

கரூர் புனித தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர் அன்பழகன் யோகா பயிற்சியை தொடங்கி வைத்து மாணவ- மாணவிகளுடன் யோகா பயிற்சி செய்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

மனதையும், உடலையும் ஒருமுகப்படுத்தக்கூடிய உன்னத கலையான யோகா கலை நம் தமிழ் பாரம்பரியத்தின் தொன்மையான கலையாகும். இந்த கலையை ஐ.நா. சபையில் ஏற்றுக்கொண்டு தற்போது உலக அளவில் சொல்லித்தருகிறார்கள். இந்த உன்னதமான நம்முடைய பாரம்பரிய கலையை நாம் ஒவ்வொருவரும் பேணி பாதுகாத்திட ஒரே வழி நாம் அனைவரும் யோகா பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக மாணவ பருவத்திலேயே இக்கலையை அனைவரும் கற்றுக்கொண்டால் பயிற்சியும் எளிமையாக கற்றுக்கொள்ள முடியும். மற்றவர்களுக்கும் இக்கலையை சொல்லித்தர முடியும். இத்தகைய உன்னத கலையை நாம் ஒவ்வொருவரும் பெற்று பல நோய்களை தவிர்ப்பதோடு மனவலிமையை பெற்று மனதை ஒருமுகப்படுத்தி கல்வியில் சிறந்து விளங்க முடியும். இத்தகைய உன்னத பயிற்சியை அனைத்து மாணவ- மாணவிகளும் கற்றுக்கொண்டு வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், சுற்றுச்சூழல் ஆசிரியர் ஜெரால்டு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினவிழா நேற்று நடைபெற்றது. இப்பள்ளியின் தேசிய மாணவர்படை சார்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரன் தலைமை தாங்கி பயிற்சியினை தொடங்கி வைத்து யோகா பயிற்சி செய்வதன் முக்கியத்துவம் குறித்து பேசினார். இதில் இப்பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்கள் யோகாசன பயிற்சிகள் செய்தனர். உடற்கல்வி ஆசிரியை அமலாலெனின் இளவரசி யோகா பயிற்சி அளித்தார். இதில் 2-வது பட்டாலியன் அவில்தார் முத்துராமன், பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இப்பள்ளியின் தேசிய மாணவர் படை திட்ட அலுவலர் தட்சணாமூர்த்தி செய்திருந்தார்.

இதுபோல் அய்யர்மலையில் உள்ள குளித்தலை அரசு கலைக்கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு கல்லூரி முதல்வர் ஜூலி தலைமை தாங்கினார். இதில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் பெரியசாமி, புவனேஸ்வரி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புலியூர் ராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சர்வதேச யோகா தினவிழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிமுருகன் தலைமை தாங்கி யோகாசனம் பற்றி மாணவர்கள் இடையே பேசினார். அவுல்தார் வீராச்சாமி முன்னிலை வகித்தார். தேசிய மாணவர் படை அலுவலர் அலெக்ஸ் இருதயநாதன் வரவேற்றார். பின்னர் தேசிய மாணவர்கள் படையினர் 12 விதமான யோகாசனங்களை மாணவ- மாணவிகள் செய்து காட்டினர். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். இதில் சிறந்த முறையில் யோகாசனம் செய்த மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் பரிசு வழங்கினார். 

Next Story