பணியிட மாறுதல் கலந்தாய்வில் முறைகேடு நடந்ததாக கூறி தஞ்சையில், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


பணியிட மாறுதல் கலந்தாய்வில் முறைகேடு நடந்ததாக கூறி தஞ்சையில், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Jun 2018 4:30 AM IST (Updated: 22 Jun 2018 1:57 AM IST)
t-max-icont-min-icon

பணியிட மாறுதல் கலந்தாய்வில் முறைகேடு நடந்ததாக கூறி தஞ்சையில், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தஞ்சாவூர்,

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு தஞ்சை மேரீஸ்கார்னர் அருகே உள்ள தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 11-ந் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்துக்குள் மாறுதல் தொடர்பான கலந்தாய்வு நடைபெற்றது. மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது.

இதில் பங்கேற்க ஆசிரியர்கள் பலர் வந்திருந்தனர். அப்போது திருவண்ணாமலை, சேலம், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் மட்டுமே வெளியிடப்பட்டன. மற்ற மாவட்டங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகளை சந்தித்து கேள்வி எழுப்பியபோது அவர் எதுவும் பேச மறுத்துவிட்டார்.

இதனால் தமிழகம் முழுவதும் நடந்த கலந்தாய்வில் முறைகேடு நடப்பதாக கூறி தஞ்சை தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி முன்பு திடீரென ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் கிட்டு தலைமை தாங்கினார். தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில துணைத் தலைவர் எழிலரசன், மாவட்ட தலைவர் அன்பழகன், மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.

இது குறித்து ஆசிரியர்கள் சிலர் கூறும்போது, மத்திய, வடக்கு மாவட்டங்களில் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர். இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் கலந்தாய்வில் 230 இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இவை அனைத்தும் மறைக்கப்பட்டு 8 மாவட்டங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் மட்டுமே வெளியிடப்பட்டன.

மற்ற மாவட்டங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் மறைக்கப்பட்டன. இதனால் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு இடமாறுதல் கிடைக்கவில்லை. மேலும் வெளி மாவட்டங்களில் பணியாற்றும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும் இடமாறுதல் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நடந்த கலந்தாய்வில் முறைகேடு நடந்துள்ளது. இதை கண்டித்து தான் ஆர்ப்பாட்டம் செய்தோம் என்றனர். 

Next Story