8 வழி பசுமை சாலை பணிக்காக அரசு பள்ளி, மாரியம்மன் கோவில் இடிக்கப்படுகிறது


8 வழி பசுமை சாலை பணிக்காக அரசு பள்ளி, மாரியம்மன் கோவில் இடிக்கப்படுகிறது
x
தினத்தந்தி 22 Jun 2018 4:30 AM IST (Updated: 22 Jun 2018 2:09 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே 8 வழி பசுமை சாலை பணிக்காக அரசு பள்ளி மற்றும் மாரியம்மன் கோவில் இடிக்கப்படுகிறது. அப்போது அருள்வந்து சாமியாடிய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் 8 வழி பசுமை சாலை அமைக்கும் பணிக்கு நிலம் அளவீடு செய்து முட்டுக்கல் நடும் பணிகளில் அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள். சேலம் அருகே ஆச்சாங்குட்டப்பட்டி, குப்பனூர், ராமலிங்கபுரம் பகுதியில் விவசாயிகள் மற்றும் பாதிக்கப்படும் பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவதால் அந்த கிராமங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், அயோத்தியாபட்டணம் அருகே ராமலிங்கபுரத்தில் நேற்று பசுமை சாலை பணிக்காக நிலத்தை கையகப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அப்பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோவில் பகுதியில் அளவீடு செய்து முட்டுக்கல் நடப்பட்டது. இதை அறிந்த ஊர் பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

பள்ளிக்கூடமும், மாரியம்மன் கோவிலும் இடிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதால் ராமலிங்கபுரத்தில் வசிக்கும் கிராமமக்கள் சோகம் அடைந்துள்ளனர். கிராமத்தில் இருக்கும் பெரியவர்கள், கல்வியாளர்கள் மாரியம்மன் கோவிலையும், பள்ளிக்கூடத்தையும் விட்டுவிட்டு வேறு வழியில் நிலத்தை அளவீடு செய்து சாலையை கொண்டு செல்லுங்கள் என்று கூறினர்.

ராமலிங்கபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 250 மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள். 12 ஆசிரியர்கள் வேலை செய்கிறார்கள். இந்த பள்ளி கடந்த 1964-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. மக்களே தங்களது பணத்தை போட்டு நிலத்தை வாங்கி பள்ளியை கட்டியுள்ளனர். தற்போது அந்த பள்ளி இடிக்கப்படுவதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, மாரியம்மன் கோவில் இடிக்கப்படுவதாக அறிந்த தனம் என்ற பெண் அங்கு வந்தார். அப்போது, அதிகாரிகள் முன்னிலையில் அவர் திடீரென அருள் வந்து சாமியாட தொடங்கினார். ‘என்னையா நீங்க எடுக்குறீங்க. நீங்க அனுபவிப்பீங்கடா. என்னை அழித்தால் நீங்க அழிந்து விடுவீர்கள். மக்களின் கண்ணீருக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும்’ எனக் கூறியதால் அங்கிருந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். கோவிலை இடிக்க நிலத்தை அளவீடு செய்த அதிகாரிகள் வந்த சமயத்தில் பெண் ஒருவர் அருள் வந்து சாமியாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராமலிங்கபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் கடந்த 2014-ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. இந்த கோவிலுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஏற்கனவே நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தபோது ரூ.1 லட்சம் நிதி உதவியும், போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி ரூ.3 லட்சமும் நிதி உதவியும் வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story