சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்த யோகா பயிற்சியில் மாணவ- மாணவிகள் பங்கேற்பு


சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்த யோகா பயிற்சியில் மாணவ- மாணவிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 21 Jun 2018 10:45 PM GMT (Updated: 21 Jun 2018 9:14 PM GMT)

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்த யோகா பயிற்சியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அதிகளவில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

சேலம்,

யோகா தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் யோகா பயிற்சி நடைபெற்றது. சேலம் நேரு யுவகேந்திரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சேலம் மாவட்ட யோகா விளையாட்டு சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை யோகா பயிற்சி நடத்தின.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரோகிணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு யோகா பயிற்சியை தொடங்கி வைத்தார். பின்னர், அவர் மாணவ-மாணவிகள், பொதுமக்களுடன் தரையில் அமர்ந்து சிறிது நேரம் யோகா பயிற்சியில் ஈடுபட்டார். நேரு யுவகேந்திரா சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் கனகராஜ், மாநகர் மாவட்ட பா.ஜனதா தலைவர் கோபிநாத், சேலம் சாய் விளையாட்டு விடுதி பொறுப்பாளர் சாய்ராம் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

இந்த யோகா பயிற்சியில் மாணவ, மாணவிகள், இளைஞர்கள், முதியவர்கள், அரசு அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு யோகாசனம் செய்ததை காணமுடிந்தது. இதில், அவர்களுக்கு யோகாசனங்கள், மூச்சுப்பயிற்சி, தியானம் என 30 நிமிடங்களுக்கு மேல் பயிற்சி அளிக்கப்பட்டது யோகா ஆசிரியர்கள் ஆனந்தமுருகன், கணபதி, வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்று யோகா பயிற்சிகளை அளித்தனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் யோகா பற்றிய விழிப்புணர்வு கையேடுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக மாவட்ட கலெக்டர் ரோகிணி பேசும்போது, யோகா என்பது வரலாற்று சிறப்புமிக்க கலையாகும். யோகாசனத்தின் முக்கியத்துவம் நாம் அனைவரும் அறிந்ததே. யோகாசனமானது நமது உடல் மற்றும் மனம் ஒற்றுமையாக செயல்பட உதவும் ஒரு உன்னத பயிற்சியாகும். யோகாசனம் மூலம் நம் உடல் ரீதியாக உள்ள அனைத்து குறைபாடுகளையும் சரிசெய்ய முடியும். அதேசமயம் நம் மனதை ஒருநிலைப்படுத்த கூடிய ஒரு அற்புதமான கலையாகும், என்றார்.

சேலம் அம்மாபேட்டையில் உள்ள சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் நேற்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் கைலாசம் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜவிநாயகம், தாளாளர் செந்தில் குமார், முதல்வர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட இதய நிறைவு தியான பயிற்சியின் தலைவர் கஸ்தூரி கலந்து கொண்டு மாணவிகளுக்கு யோகா பயிற்சி செய்வதின் வழிமுறைகள் குறித்தும், அதன் பலன்கள் குறித்தும், தேர்வில் வெற்றிபெறக்கூடிய வழிமுறைகளையும் எடுத்துரைத்தார். 

Next Story