இருசக்கர வாகனங்களை திருடி உதிரி பாகங்களாக விற்ற 2 பேர் கைது 27 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு


இருசக்கர வாகனங்களை திருடி உதிரி பாகங்களாக விற்ற 2 பேர் கைது 27 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு
x
தினத்தந்தி 22 Jun 2018 4:15 AM IST (Updated: 22 Jun 2018 2:51 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் இருசக்கர வாகனங்களை திருடி உதிரி பாகங்களாக விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 27 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன.

திருச்சி,

திருச்சியில் இரு சக்கர வாகனங்கள் திருடு போகும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி பட்டாபிராமன் சாலையில் ஒரு மோட்டார் சைக்கிளை திருடி அண்டகொண்டான் சின்னசாமி நகரில் ஒரு வீட்டிற்கு கொண்டு சென்ற ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்த அசாருதீன் (வயது25) என்பவர் தில்லைநகர் போலீசாரிடம் சிக்கினார். அந்த வீட்டில் ஏராளமான மோட்டார் சைக்கிளின் உதிரிபாகங்கள் குவிந்து கிடந்தன. திருடிய மற்றும் திருட்டு இரு சக்கர வாகனங்களை உதிரிபாகங்களாக மாற்றி குடோனாக அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. மேலும் அவரது குடோனில் வேலை பார்த்து வரும் தென்னூர் பகுதியை சேர்ந்த முஸ்தபாவும் (18) பிடிபட்டார்.

சிக்கிய அசாருதீன், முஸ்தபா ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இரு சக்கர வாகனங்களை திருடி உதிரிபாகங்களாக மாற்றி மெக்கானிக்கல் கடை, இரு சக்கர வாகன பட்டறை, பழைய இரும்பு பொருட்கள் குடோன் ஆகியவற்றில் விற்று வந்தது தெரியவந்தது. மேலும் வெளிநபர்கள் திருடி வந்த மோட்டார் சைக்கிள்களையும் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை விலை கொடுத்து வாங்கி உள்ளனர். அதனையும் உதிரிபாகங்களாக மாற்றி விற்று வந்தனர். திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை உடனடியாக பிரித்து உதிரிபாகங்களாக மாற்றுவது இவர்களுக்கு கைவந்த கலை எனவும், என்ஜின் மற்றும் சேஸ் எண்களை உடனடியாக உளி மூலம் அழித்து விடுவதும் தெரிய வந்தது.

இதையடுத்து குடோனில் குவிந்து கிடந்த மோட்டார் சைக்கிள்களின் உதிரிபாகங்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் போலீசார் இறங்கினர். அசாருதீன், முஸ்தபா மற்றும் மோட்டார் சைக்கிள் மெக்கானிக்குகளை வைத்து இந்த பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் 27 மோட்டார் சைக்கிள்களின் உதிரிபாகங்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து பல பாகங்களாக சிதறி கிடந்த உதிரி பாகங்களை ஒன்று சேர்த்து அந்த 27 மோட்டார் சைக்கிள்களையும் உருவாக்கினர். மேலும் 10 இரு சக்கர வாகனங்களின் சேஸ்கள் எண்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களில் என்ஜின் எண்கள் அழிக்கப்பட்ட நிலையிலும் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து அசாருதீன், முஸ்தபா ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். 27 மோட்டார் சைக்கிள் களையும் மீட்டனர். சேஸ்கள், என்ஜின்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு மொத்தம் ரூ.4 லட்சத்து 19 ஆயிரம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். மீட்கப்பட்ட இரு சக்கர வாகனங்கள் தில்லைநகர், கோட்டை, உறையூர், ஸ்ரீரங்கம், விமானநிலையம், புத்தூர் அரசு மருத்துவமனை ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருடப்பட்டவை என அசாருதீன் ஒப்புக்கொண்டார்.

கைதான 2 பேரையும் திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்-4ல் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் நேற்று அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் குடோனில் இரு சக்கர வாகன உதிரிபாகங்கள் கிடப்பதாகவும், அதனை ஒருங்கிணைத்து கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெறும் என போலீசார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட 27 மோட்டார் சைக்கிள்களும் தில்லைநகர் போலீஸ் நிலையத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. அதனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வாகனங்களின் உரிமையாளர்களிடம் போலீசார் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் திறம்பட செயல்பட்ட போலீசார் மற்றும் தனிப்படையினரை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பாராட்டினார். 

Next Story