மீன்வளத்துறையில் பதிவு செய்யாத 171 விசைப்படகு உரிமையாளர்களுக்கு நோட்டீசு: கடலூர் அதிகாரிகள் நடவடிக்கை
மீன்வளத்துறையில் பதிவு செய்யாத 171 விசைப்படகுகளின் உரிமையாளர்களுக்கு கடலூர் அதிகாரிகள் நோட்டீசு கொடுத்துள்ளனர்.
கடலூர்,
வங்கக்கடலோரத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் 55 கிலோ மீட்டர் நீளத்துக்கு கடற்கரை உள்ளது. கடற்கரையையொட்டி சுமார் 45 கிராமங்களில் வசிக்கும் மீனவர்கள் மீன்பிடி தொழிலை நம்பி உள்ளனர்.
கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுத்தப்படும் விசைப்படகுகளை பதிவு செய்ய வேண்டும் என்பது மீன்வளத்துறையின் உத்தரவாகும். அதன்படி கடலூர் மாவட்டத்தில் 254 விசைப்படகுகளை மீனவர்கள் பதிவு செய்திருந்தனர்.
இன்னும் ஏராளமான விசைப்படகுகள் பதிவு செய்யப்படாமல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருவதாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் சென்னையில் இருந்து உயர் அதிகாரிகள் கடலூர் மாவட்டத்துக்கு வந்து கடற் கரை கிராமங்களில் உள்ள விசைப்படகுகளை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் 171 மீன்பிடி விசைப்படகுகள் பதிவு செய்யப்படாமல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதனால் மீன்வளத்துறையில் பதிவு செய்யாமல் விசைப்படகுகளை பயன் படுத்துவது ஏன்? என்று விளக்கம் கேட்டு நேற்று முன்தினம் 55 விசைப்படகுகளின் உரிமையாளர்களுக்கும், நேற்று 116 விசைப்படகுகளின் உரிமையாளர்களுக்கும் கடலூர் மீன்வளத்துறை அதிகாரிகள் நோட்டீசு கொடுத்து உள்ளனர்.
இந்த 171 மீன்பிடி விசைப்படகுகளில் பெரும்பாலானவை சுருக்குமடி வலைகளை பயன்படுத்துபவையாகும். இதுதவிர நிர்ணயிக்கப்பட்ட நீளத்தை விட அதிக நீளம் கொண்ட மீன்பிடி விசைப்படகுகளுக்கும், 120 குதிரை சக்தி திறனுக்கு அதிகமான குதிரை சக்தி திறன் கொண்ட மோட்டார்களைக்கொண்ட விசைப்படகுகளுக்கும் நோட்டீசுகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த நோட்டீசுகளுக்கு உரிய விளக்கம் கொடுக்க விசைப்படகு உரிமையாளர்கள் தவறும் பட்சத்தில் சுருக்குமடி வலைகளுடன் படகுகளை பறிமுதல் செய்யவும், அதிகபட்சம் 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் சட்டத்தில் இடம் உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் தாழங்குடா, தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம் உள்பட சுமார் 6 கிராமங்களில் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்துகிறார்கள். தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும், சோனாங்குப்பம் மீனவர்களுக்கும் இடையே நடந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டதைத்தொடர்ந்து இருகிராம மீனவர்களும் மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் இரு கிராம மீனவர்களும் மின்பிடி தொழிலுக்கு சென்று விட்டனர். அவர்களில் பலர் சுருக்குமடி வலைகளுடன் விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றுள்ளதாக புகார்கள் வந்து உள்ளன. இது தொடர்பாக மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்து விட்டோம். சுருக்குமடி வலைகளுடன் கடலுக்கு சென்று உள்ள மீனவர்களை கட்டுப்படுத்தும் அளவுக்கு எங்களிடம் போதிய வசதிகள் இல்லாததால், கலெக்டரிடமும் தகவல் தெரிவித்துள்ளோம். அவரது ஆலோசனைப்படி கடலூர் சப்-கலெக் டரிடமும், போலீஸ் சூப்பிரண்டிடமும் எழுத்து மூலம் புகார் தெரிவித்து உள்ளோம்.
பொதுவாக சுருக்குமடி வலைகளை பயன்படுத்துபவர்களிடம் இருந்து வலைகளுடன், படகுகளையும், மீன்களையும் பறிமுதல் செய்ய சட்டத்தில் இடம் உள்ளது. அந்தமீன்களை ஏலம் விட்டு வரும் தொகைக்கு 5 மடங்கு தொகையை அபராதமாக விதிக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக மாவட்டத்தையொட்டியுள்ள கடல் பகுதியில் சாதகமான நீரோட்டம் இல்லாததால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த சில தினங்களாக கன்னியாகுமரி கடல் பகுதியில் இருந்து சென்னை நோக்கி நீரோட்டம் காணப்படுவதால் மீன் வளம் அதிகமாக தெரிகிறது. எனவே இந்த ஆண்டு மீன்பிடி தொழில் லாபகரமாக இருக்கும் என்றார்.
Related Tags :
Next Story