சர்வதேச யோகா தினத்தையொட்டி 1000 மாணவர்களுடன் கலெக்டர் தண்டபாணி யோகா பயிற்சி


சர்வதேச யோகா தினத்தையொட்டி 1000 மாணவர்களுடன் கலெக்டர் தண்டபாணி யோகா பயிற்சி
x
தினத்தந்தி 22 Jun 2018 5:00 AM IST (Updated: 22 Jun 2018 3:20 AM IST)
t-max-icont-min-icon

சர்வதேச யோகா தினத்தையொட்டி கடலூரில் 1000 மாணவர்களுடன் மாவட்ட கலெக்டர் தண்டபாணி யோகா பயிற்சி செய்தார். யோகா பயிற்சி செய்தால் உடலை சமநிலையில் வைத்துக்கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.

கடலூர், 

சர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நாட்டின் பல்வேறு இடங்களிலும் யோகா பயிற்சிகள் நடந்தன. கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்த யோகா பயிற்சியில் கலெக்டர் தண்டபாணி கலந்து கொண்டு 22 பள்ளிக்கூடங்களைச்சேர்ந்த ஆயிரம் மாணவர்களுடன் தரையில் அமர்ந்து 13 விதமான யோகா பயிற்சி செய்தார்.

இதைத்தொடர்ந்து கடலூர் டவுன்ஹாலில் நேருயுவகேந்திரா சார்பில் நடந்த சர்வதேச யோகாசன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலெக்டர் தண்டபாணி யோகா பயிற்சியின் சிறப்புகள் பற்றி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய நாட்டின் ஆயக்கலைகள் 64-ல் முக்கியமான கலை யோகாசன கலையாகும். யோகா என்பதற்கு கட்டுதல் என்று பொருளாகும். உடல், மனம், மூச்சு இவை மூன்றையும் ஒருங்கிணைக்கக்கூடியது யோகாசனமாகும். பதஞ்சலி முனிவர் நாட்டுக்கு விட்டுச்சென்ற யோகா கலை இன்று உலக நாடுகளிலெங்கும் பிரபலமாக உள்ளது.

உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது போல நம் உடலிலும் பஞ்ச பூத தத்துவங்கள் உள்ளன. இதில் நீர்தத்துவம் குறைந்தால் முடிநரைக்கும், ஆகாய தத்துவம் குறைந்தால் செவித்திறன் குறையும். யோகாசனமானது நம் உடலை சமநிலையில் வைத்துக்கொள்ள உதவும்.

சித்தர்கள் 3 விதமான மூச்சுப்பயிற்சிகளை செய்தனர். அந்த 3 விதமான மூச்சுப்பயிற்சிகளை தினம் இருவேளை அரை மணி நேரம் செய்தாலே அன்றன்றைக்கு தேவையான முழு ஆற்றல் கிடைத்து விடும். எனவே அனைவரும் தவறாமல் தினமும் இருவேளை யோகா பயிற்சி செய்யுங்கள். அப்போது உங்களுடைய பேராற்றல் வெளிப்படும், ஆரோக்கியமாக வாழ முடியும். இவ்வாறு கலெக்டர் தண்டபாணி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை கலெக்டர் தண்டபாணி வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜா, மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் எம்.ஹெலன்ராணி ஆகியோர் செய்திருந்தனர்.

இதேபோல் கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக்கல்லூரியிலும் சர்வதேச யோகாசன விழா நடந்தது. விழாவில் மாணவ-மாணவிகள் யோகாசன பயிற்சி மேற்கொண்டனர்.

Next Story