தாம்பரத்தில் ஆயிரம் மாணவர்களுடன் மத்திய மந்திரி யோகா பயிற்சி தமிழிசை சவுந்தரராஜனும் பங்கேற்பு


தாம்பரத்தில் ஆயிரம் மாணவர்களுடன் மத்திய மந்திரி யோகா பயிற்சி தமிழிசை சவுந்தரராஜனும் பங்கேற்பு
x
தினத்தந்தி 22 Jun 2018 4:00 AM IST (Updated: 22 Jun 2018 4:00 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரத்தில் ஆயிரம் மாணவ-மாணவிகளுடன் மத்திய மந்திரி சுரேஷ்பிரபு யோகா பயிற்சியில் ஈடுபட்டார். இதில் தமிழிசை சவுந்தரராஜனும் பங்கேற்றார்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள ஸ்ரீசாய்ராம் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை மந்திரி சுரேஷ்பிரபு கலந்துகொண்டு ஆயிரம் மாணவ-மாணவிகளுடன் சேர்ந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.

இதில் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கல்லூரி முதன்மை செயல் அதிகாரி சாய் பிரகாஷ், லியோமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் மத்திய மந்திரி சுரேஷ்பிரபு பேசியதாவது:-

தினமும் யோகா செய்யவேண்டும்

யோகா கலையை பதஞ்சலி முனிவர் பயிற்சி செய்து நமக்கு தெரியப்படுத்தினார். ஆனால் யோகா கலையை யார் உருவாக்கியது? என்பது இதுவரை யாருக்கும் தெரியாது. நமது முன்னோர்கள் யோகிகள். நாம் ஆரோக்கியத்துடன் வாழ பல கலைகளை நமக்கு அளித்து சென்று உள்ளனர்.

பழமையான கலை நமது யோகா கலை. ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடன் வாழ யோகா கண்டுபிடிக்கப்பட்டது. பல நூற்றாண்டுகளாக இந்த கலையை நாம் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அதைதொடர்ந்து பின்பற்றவில்லை. பிரதமர் மோடி யோகா கலையை அனைவரும் செய்யும் மக்கள் இயக்கமாக மாற்றினார்.

உடல், மனம் மற்றும் ஆத்ம ஆரோக்கியத்துக்கு தினமும் அனைவரும் யோகா பயிற்சி செய்ய வேண்டும். இதனால் நோய் பாதிப்பு ஏதும் உடலுக்கு வராமல் தடுக்க முடியும். யோகா செய்வதால் உடல், மனம், ஆத்மாவிற்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது.

மாணவர்கள் யோகாவை தொடர்ந்து செய்யவேண்டும். எந்த பிரச்சினைகளில் இருந்தும் யோகா உங்களை மாற்றிவிடும். உலகம் முழுவதும் யோகா தினத்தை எடுத்துச்சென்ற பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். யோகா பயிற்சியை தினமும் செய்யும் வகையில் உங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

நோய்கள் வராது

நிகழ்ச்சியில் தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது, “எல்லோரும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி, அனைவரும் யோகா பயிற்சி செய்ய வேண்டும் என இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் வலியுறுத்தினார். ஒரு டாக்டராக சொல்கிறேன், யோகா செய்தால் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் வராது, புற்றுநோய் வருவது குறையும். எந்த நோயும் வராது” என்றார். 

Next Story