நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Jun 2018 4:23 AM IST (Updated: 22 Jun 2018 4:23 AM IST)
t-max-icont-min-icon

காரைக்காலில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்கால்,

காரைக்கால் பழைய ரெயில்வே நிலையம் அருகே காரை பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். 6-வது ஊதியக்குழு பரிந்துரைத்தபடி 3 ஆண்டுக்கால பஞ்சப்படிகளை ஒரே தவணையாக வழங்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு காரை பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சம்மேளன தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர்கள் ஜார்ஜ், ஜெய்சிங், தலைவர் சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் ஷேக் அலாவுதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு வழங்கியதுபோல் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கும் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தப்படுத்தக்கோரி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ளாட்சி ஊழியர்கள் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றது. அதனையடுத்து அமைச்சர் நமச்சிவாயம் சம்மேளன நிர்வாகிகளை அழைத்து உள்ளாட்சி ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைளை அமல்படுத்துவதற்கான அரசாணையை வெளியிட்டுவிடுகிறோம் என எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி அளித்தார். அதனையடுத்து ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். ஆனால் இதுவரை வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அமைச்சர் நமச்சிவாயம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும், 6-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி கடந்த 1-7-2016 முதல் 1-1-2018 வரை வழங்கவேண்டிய பஞ்சப்படிகளை ஒரே தவணையாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.


Next Story