ஆரணி அருகே அதிகாரிகள் துரத்தியபோது மணல் கடத்தி வந்த மினிலாரி மோதி தொழிலாளி பலி


ஆரணி அருகே அதிகாரிகள் துரத்தியபோது மணல் கடத்தி வந்த மினிலாரி மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 22 Jun 2018 4:31 AM IST (Updated: 22 Jun 2018 4:31 AM IST)
t-max-icont-min-icon

ஆரணி அருகே மணல் கடத்தி சென்ற மினிலாரி வீட்டின் முன்பு படுத்திருந்த தொழிலாளி மீது மோதியது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

ஆரணி,

ஆரணியை அடுத்த வீரசம்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் நடேசன் (வயது 60), தொழிலாளி. இவரது மகள் சாந்தி தச்சூர் சமத்துவபுரத்தில் வசித்து வருகிறார். மருமகன் சரவணன் சென்னையில் வேலை செய்துகொண்டு அங்கேயே தங்கியிருப்பதால் மகளுக்கு துணையாக நடேசன் தச்சூரில் வசித்து வந்தார். நேற்று அதிகாலை தச்சூர் சமத்துவபுரத்தில் வீட்டின் முன்பு நடேசன் படுத்து கொண்டிருந்தார்.

அப்போது மணல் கடத்தி சென்ற மினிலாரியை ஆரணி தாசில்தார் எஸ்.திருமலை மற்றும் வருவாய்த்துறையினர் மடக்கினர். ஆனால் மினிலாரியின் டிரைவர் அலெக்ஸ் பாண்டியன் நிறுத்தாமல் வேகமாக சென்றார். இதையடுத்து மினிலாரியை அதிகாரிகள் துரத்தி வந்தனர்.

மினிலாரி மோதி பலி

அப்போது திடீரென சீனிவாசபுரம் சாலையில் சமத்துவபுரத்திற்குள் மினிலாரி புகுந்தது. தாறுமாறாக ஓடிய மினிலாரி சாலையோரம் வீட்டின் முன்பு படுத்திருந்த நடேசன் மீது மோதியது. இதில் அவரது வேட்டி மினிலாரியில் மாட்டிக் கொண்டு சிறிது தூரம் இழுத்துச் சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து லாரி டிரைவர் கீழே இறங்கி சக்கரத்தில் சிக்கி இறந்த நடேசன் பிணத்தை தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து லாரியை ஓட்டிச் சென்றுவிட்டார்.

இதனை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் லாரியை விரட்டிச் சென்றனர். அப்போது எதிரே ஆரணி தாசில்தார் மற்றும் வருவாய்த்துறையினர் வந்தனர். அவர்களை பார்த்ததும் மினிலாரியை அங்கேயே நிறுத்திவிட்டு டிரைவர் அலெக்ஸ்பாண்டியன் தப்பியோடி விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆரணி தாலுகா போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

டிரைவர் கைது

அப்பகுதி பொதுமக்கள் மணல் திருட்டை தடுக்க வேண்டும். தப்பியோடிய லாரி டிரைவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பிணத்தை வாங்க மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவர் அலெக்ஸ்பாண்டியனை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.

ஆர்ப்பாட்டம்

அதனைத்தொடர்ந்து சக்திசேனா அமைப்பை சேர்ந்தவர்கள் தச்சூர் ஆற்றுப் பகுதியில் அமர்ந்து மணல் திருட்டை தடுக்காத வருவாய்த்துறை மற்றும் காவல்துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் உடனடியாக அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி, ஆற்று பகுதியில் இருந்து வெளியேறுவதற்கான வழிகளை பொக்லைன் எந்திரம் வைத்து பெரிய அளவிலான பள்ளம் தோண்டினர். மேலும் தொடர்ந்து கண்காணிப்பு செய்வதாகவும் உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story