சூரிய மின்சார வேலியை உடனடியாக அகற்றவேண்டும்


சூரிய மின்சார வேலியை உடனடியாக அகற்றவேண்டும்
x
தினத்தந்தி 22 Jun 2018 4:58 AM IST (Updated: 22 Jun 2018 4:58 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் காட்டில் வனவிலங்குகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சூரிய மின்சார வேலியை உடனடியாக அகற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், பேராசிரியர் முருகவேல் என்பவர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது.

பவானி சாகர் அணையில், நீர் வரத்து இல்லாத காலங்களில், நீர் பிடிப்பு பகுதிகளில் தற்காலிகமாக விவசாயம் செய்ய ஏழை விவசாயிகளுக்கு 1967-ம் ஆண்டு முதல் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலம், வனத்துறைக்கும், தமிழக பொதுப்பணித்துறைக்கும் சொந்தமானது.

இந்த நிலத்தை தகுதியான ஏழை விவசாயிகளுக்கு குத்தகைக்கு வழங்க ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.

1980-ம் ஆண்டு வனத்துறை சட்டம் அமலுக்கு வந்த பின்னர், வன பகுதியில் உள்ள நிலத்தை யாருக்கும் குத்தகைக்கு விட வனத்துறைக்கு அதிகாரம் இல்லை. இருந்தாலும், பவானிசாகர் அணையில் உள்ள நீர் பிடிப்பு பகுதியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து, பலர் விவசாயம் செய்கின்றனர்.

அதுவும் யானை உள்ளிட்ட வன விலங்குகள் பயிர்களை நாசப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக சூரிய மின்சார வேலியையும் அவர்கள் அமைத்துள்ளனர். இதனால், யானை வழித்தடங்கள் மறிக்கப்படுகிறது. யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வந்து விடுகிறது.

எனவே வனப்பகுதியின் நீர் பிடிப்பு பகுதியில் உள்ள சட்டவிரோதமான ஆக்கிரமிப்புகளையும், சூரிய மின்சார வேலியையும் அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஜி.கே.இளந்திரையன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விவசாயிகள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல், ‘சூரிய மின்சார வேலியினால், ஒரு யானை கூட இதுவரை உயிரிழக்கவில்லை. எந்த ஒரு விலங்குகளுக்கும் எந்த ஒரு பாதிப்பும் இதுவரை ஏற்பட்டது இல்லை’ என்று வாதிட்டார்.

இதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ‘யானை வழித்தடத்தில் சூரிய மின்சார வேலியை அமைத்துள்ளர்கள். இதற்கு யாரிடம் அனுமதி பெற்றீர்கள்? வீட்டில் பயன்படுத்தப்படும் கொசு அடிக்கும் மட்டையில் உங்கள் கையை வைக்க முடியுமா? கையை வைத்து பாருங்கள் அப்போதுதான், அந்த மின்சார பாதிப்பு உங்களுக்கு தெரியும். 10 கிலோ வாட் மின்சாரம் பாயும் சூரிய மின்சார வேலியினால், வன விலங்குகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படாதா?’ என்று கருத்து தெரிவித்தனர்.

அப்போது வனத்துறை சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நீர் வரத்து இல்லாத காலத்தில், நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய இந்த நிலம் கடந்த 1967-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டது. இந்த நிலம் வனத்துறைக்கும், பொதுப்பணித்துறைக்கும் சொந்தமானது.

ஒரு ஏக்கர் நிலத்துக்கு ரூ.15 என்ற வீதத்தில் ஆண்டு குத்தகையாக நிர்ணயம் செய்து, 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. அதாவது, ஒரு ஏழை விவசாயிக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. 1980-ம் ஆண்டு வனத்துறை சட்டம் அமலுக்கு வந்தபின்னர், வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை யாருக்கும் குத்தகைக்கு விட முடியாது.

இதனால், தற்போது பலர் வனத்துறை நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து, நெல், நிலக்கடலை, வாழை உள்ளிட்டவைகளை விவசாயம் செய்கின்றர். இந்த பயிர்களை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க சூரிய மின்சார வேலியை அமைத்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற வனத்துறை எவ்வளவோ முயற்சித்தும், அது தோல்வியில் தான் முடிந்துள்ளது.

இந்த ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுவது என்பது மிகப்பெரிய சவாலான பணியாகும். அவ்வாறு வெளியேற்றும்போது, சட்டம், ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படும். இவர்களால், மனிதர்கள்-விலங்குகள் மோதல் அடிக்கடி நடைபெறுகிறது.

இந்த நீர் பிடிப்பு பகுதியை ஆக்கிரமித்து விவசாயம் மட்டும் செய்யாமல், சவுடு மணல் அள்ளும் குவாரிகளும் இருக்கிறது. இந்த மணலை எடுத்துச்செல்ல 24 நேரமும் லாரிகள் பயன்படுத்தப்படுவதால், வன விலங்குகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ‘சுற்றுச்சூழலை தமிழக வனத்துறை அதிகாரிகள் எப்படி பாதுகாத்து பராமரிக்கின்றனர்? என்பதை பொதுமக்கள் தெரியும் விதமாக, இந்த அறிக்கையை இணையதளத்தில் வெளியிடப்போவதாக நீதிபதிகள் எச்சரிக்கை செய்து கருத்து தெரிவித்தனர். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது.

வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில், சூரிய மின்சார வேலி அமைக்கப்பட்டுள்ளதால், வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படுகிறது. இந்த வேலியை அமைக்க யாருக்கும் இதுவரை எந்த ஒரு அனுமதியும் வழங்கப்படவில்லை.

இந்த பகுதி, சத்தியமங்கலம் காட்டில் ஒரு பகுதியாகவும், யானைகளின் வழித்தடமாகவும் உள்ளது. எனவே, விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள சூரிய மின்சார வேலியை உடனடியாக பொதுப்பணித்துறை, வனத்துறை அதிகாரிகள் அகற்றவேண்டும்.

இதற்காக ஈரோடு மாவட்ட போலீசாரின் பாதுகாப்பையும் அவர்கள் பெற்றுக்கொள்ளலாம். இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜூலை 25-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அன்று எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விவரங்களை, அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Next Story