ஏ.டி.எம்.மில் நூதன முறையில் மோசடி வாலிபர் கைது
உத்திரமேரூரில் வங்கி ஏ.டி.எம்.மில் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
உத்திரமேரூர்,
உத்திரமேரூர் பஜார் தெருவில் உள்ள வங்கியின் முன்புறம் உள்ள ஏ.டி.எம்.ல் கடந்த சில நாட்களுக்கு முன்பாக உத்திரமேரூர் கல்லம்மாநகர் குட்டியப்பன் என்பவரது மனைவி சாந்தி (வயது 55) பணம் எடுக்க வந்தார். தன்னுடைய ஏ.டி.எம். கார்டை அருகில் நின்று கொண்டிருந்த வாலிபரிடம் கொடுத்து ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து கொடுக்க சொன்னார்.
சிறிதுநேரம் பணம் எடுக்க முயற்சித்த வாலிபர் உங்களுடைய வங்கி கணக்கில் பணம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது. பின்னர் சாந்தி வங்கி அதிகாரிகளிடம் சென்று விசாரித்தபோது ரூ.3 ஆயிரம் அவரது வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதே போல் மல்லிகாபுரத்தை சேர்ந்தவர் சாந்தி (50). இவரும் இதேபோல் அதே ஏ.டி.எம்.மிற்கு வந்து அந்த வாலிபரிடம் கொடுத்து முயற்சித்தபோது வங்கி கணக்கில் பணம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது. பின்னர் அவரது வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் மோசடியாக ரூ.10 ஆயிரம் எடுத்ததும் தெரியவந்தது.
இது குறித்து இருவரும் உத்திரமேரூர் போலீசில் புகார் செய்திருந்தனர். இந்த சம்பவங்களின் அடிப்படையில் உத்திரமேரூர் போலீசார் வங்கி அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். 2 சம்பவத்திலும் ஒரு குறிப்பிட்ட நபர், ஒரு குறிப்பிட்ட மோட்டார் சைக்கிள் அங்கு இருந்தது தெரியவந்தது. போலீசார் தீவிர விசாரணை நடத்திவந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் அதே மோட்டார் சைக்கிள் அந்த ஏ.டி.எம். அருகில் இருந்தது. அருகில் இருந்த வாலிபரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் திணையாம்பூண்டியை சேர்ந்த மணிகண்டன் (27) என்பதும், 2 சம்பவங்களிலும் ஏ.டி.எம்.ல் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. விசாரணையில் இது போன்ற பல சம்பவங்களிலும் அவர் ஈடுபட்டது தெரியவந்தது.
உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து மேற்கொண்டு விசாரணை செய்து உத்திரமேரூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினார். அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அவரை போலீசார் செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story