குழந்தைகளை கடத்தி கொலை, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் காட்சிகள்


குழந்தைகளை கடத்தி கொலை, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் காட்சிகள்
x
தினத்தந்தி 23 Jun 2018 5:00 AM IST (Updated: 23 Jun 2018 12:27 AM IST)
t-max-icont-min-icon

குழந்தைகளை கடத்தி கொலை செய்வதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக காட்சிகள் பரவி வருகிறது. இது தொடர்பாக வதந்தி பரப்புவோர் மீது நட வடிக்கை எடுக்க பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஜெயங்கொண்டம்,

காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட சில மாவட்டங்களில் குழந்தைகளை கடத்தும் வடமாநில கும்பலின் நடமாட்டம் இருப்பதாக கடந்த சில மாதங்களாக வதந்தி பரவி வந்தது. ‘வாட்ஸ்-அப்‘, ‘முகநூல்‘ (பேஸ்புக்) போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பரவும் இதுபோன்ற வதந்திகளால், இதுவரை அப்பாவிகள் பலர் தாக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலர் உயிர் இழந்தும் இருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து தற்போது பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் குழந்தைகளை கடத்தும் வட மாநில கும்பலின் நடமாட்டம் இருப்பதாக கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வைரலாக பரவி வருகிறது.

இதேபோல் வெளி மாநிலங்களில் குழந்தைகளை கடத்தி, அவர்களின் உடல் உறுப்புகளை ஆட்டின் கழுத்தை அறுப்பது போன்று அறுத்து போடுவது போன்ற வீடியோ காட்சிகள் தமிழகத்தில் நடப்பது போன்று சித்தரித்து பல வீடியோ பதிவுகள், புகைப்படங்களை சிலர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர், செந்துறை, அரியலூர் போன்ற நகரங்களை சுற்றிலும் குழந்தைகளை கடத்தும் கும்பல் சூழ்ந்து உள்ளது. அந்த மர்ம நபர்கள் எங்கேயும் எப்போதும் குழந்தைகளை கடத்தி கொலை செய்ய வாய்ப்பு உள்ளது. ஒரு சில குழந்தைகளை கொன்று விட்டனர். மிகவும் பாதுகாப்பாய் இருக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய தகவல்கள் வைரலாக பரவி வருகிறது. இந்த தகவலை சமூக வலைத்தளங்களில் காணும் பொதுமக்கள் இதனை மற்றவர்களுக்கு பகிர வேண்டும் என்று உலா வருகிறது.

சமூக வலைத்தளங்களில் இந்த பதிவினை பார்த்து, பொதுமக்கள் வட மாநிலங்களை சேர்ந்தவர்களை பார்த்தாலே குழந்தை கடத்தல்காரர்கள் என்ற சந்தேகம் நிலவுகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோரியம்பட்டி கிராமத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு பெண் மனநோயாளியை குழந்தை கடத்தல்காரர் என நினைத்து பொதுமக்கள் 10 பேர் சேர்ந்து அடித்து துன்புறுத்தி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அதை தொடர்ந்து ஜெயங்கொண்டம் அருகே உள்ள உத்திரக்குடி கிராமத்தில் ஆண், பெண் இருவரையும் குழந்தை கடத்தல்காரர்கள் என நினைத்து சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதைப்போல் பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குழந்தை கடத்தல்காரர்கள் என்று நினைத்து பொதுமக்கள் வட மாநிலங்களை சேர்ந்தவர்களை பிடித்து தாக்கி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து வருகின்றார்கள். இதனால் குழந்தை கடத்தல் கும்பல் பற்றிய வதந்தியால் அப்பாவிகள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

எனவே அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் குழந்தை கடத்தல்காரர்கள் ஊடுருவி இருப்பது உண்மைதானா? இதுவரை இந்த மாவட்டங்களில் எங்கேயாவது குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளார்களா? என்பதை மக்களிடம் போலீசார் தெளிவுப்படுத்த வேண்டும். இது தொடர்பாக வதந்தி பரப்புவோர் மீது மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங் களில் வசிக்கும் பொதுமக்களிடம் உள்ள அச்சத்தை போக்க, இதுபோன்ற சம்பவங்கள் நடந்த பகுதிகளில் போலீசார் ஆட்டோக்களில் சென்று ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும். மேலும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும் பொதுமக்கள் போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபற்றி ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி கூறுகையில், “பொதுமக்களுக்கு வாட்ஸ்அப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் குழந்தைகடத்தல் தொடர்பாக வதந்தி பரப்பப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. பொதுமக்கள் இதனை நம்பவேண்டாம். உண்மைத்தன்மையை காவல் துறை ஆராய்ந்து வருகிறது. கிராமங்களில், நகரங்களில் சந்தேகப்படும் நபர் சுற்றித் திரிந்தால் அவரைப்பற்றி உடனே போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும். அதை விடுத்து சட்டத்தை நீங்களே கையில் எடுத்து அடித்து சந்தேகப்படும் நபர்களை துன்புறுத்தும் செயல்களில் ஈடுபட வேண்டாம். வதந்தி பரப்பு பவர்கள் மீது சட்டப்படி நட வடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Next Story