தூத்துக்குடி துப்பாக்கி சூடு: விசாரணை கமி‌ஷனை நியமித்த அரசாணை முரணாக உள்ளது தமிழக அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


தூத்துக்குடி துப்பாக்கி சூடு: விசாரணை கமி‌ஷனை நியமித்த அரசாணை முரணாக உள்ளது தமிழக அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 23 Jun 2018 3:45 AM IST (Updated: 23 Jun 2018 12:33 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை விசாரிக்க கமி‌ஷன் நியமித்தது தொடர்பான அரசாணையில் முரண்பாடு உள்ளது பற்றி விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

தூத்துக்குடியில் கடந்த மே 22–ந்தேதி நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணாஜெகதீசனை நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதில் சட்டம்–ஒழுங்கு பிரச்சினையின் காரணமாகத்தான் துப்பாக்கி சூடு நடந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது சட்டத்துக்கு எதிரானது.

துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு சட்டம்–ஒழுங்கு பிரச்சினை தான் காரணம் என்று அரசே முடிவு எடுத்து உள்ளதை ஏற்க முடியாது. எனவே துப்பாக்கிச் சூடு சம்பவத்தை விசாரிக்க ஒரு நபர் கமி‌ஷனை நியமித்து பிறப்பித்த அரசாணை விதிகளுக்கு புறம்பானது.

அந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். விதிகளுக்கு உட்பட்டு கமி‌ஷன் அமைத்து புதிய அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “ஒட்டு மொத்த பிரச்சினையை விசாரிக்க வேண்டும் என்பதற்கு பதிலாக, சட்டம்–ஒழுங்கு பிரச்சினையால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தை விசாரிக்க வேண்டும் என்பது முரணானது“ என்று கருத்து தெரிவித்தனர்.

பின்னர் இந்த அரசாணை குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசின் பொதுத்துறை முதன்மைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கை வருகிற 27–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story