“கடந்த தலைமுறையில் தொடங்கிய ஊழல் தற்போதும் தொடர்கிறது” மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை
அரசு மணல் குவாரி முறைகேடுகள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது, “கடந்த தலைமுறையில் தொடங்கிய ஊழல் தற்போதும் தொடர்கிறது” என மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
மதுரை,
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ராஜாமணி, மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
திருச்சி, கரூர் மாவட்டங்களில் செயல்பட்டு வந்த அரசு மணல் குவாரிகளில் முறைகேடு நடைபெற்றதால் மணல் குவாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த குவாரி முறைகேடு தொடர்பாக ஆய்வு செய்ய வக்கீல் ஆணையர்களை ஐகோர்ட்டு நியமனம் செய்தது. இவர்கள் குவாரிகளில் நேரில் ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வில், அனைத்து குவாரிகளிலும் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதும், சிந்தலச்சாவடி என்ற இடத்தில் அனுமதி பெறாமல் குவாரி செயல்படுவதும், அனைத்து குவாரிகளிலும் முறைகேடாக மணல் அள்ளப்பட்டு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தப்படுவதும், தொட்டியம் எம்.களத்தூர் மேய்க்கல்நாய்க்கன்பட்டியில் அனுமதி பெறாமல் மணல் சேமிப்பு கிடங்கு செயல்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக வக்கீல் ஆணையர்கள் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர். முறைகேடு நடைபெற்ற காலத்தில் இந்த குவாரிகளில் பொதுப்பணித்துறை உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் பொதுப்பணித்திலகம், உதவி பொறியாளர் சதீஷ்குமார் ஆகியோர் பணிபுரிந்தனர்.
தமிழகத்தில் மணல் பெறுவதற்கு ஆன்லைன் பதிவு முறை 2017 ஜூன் மாதம் அமல்படுத்தப்பட்டது. இந்த குவாரிகளில் ஆன்லைனில் பதிவு செய்த அனைத்து லாரிகளுக்கும் மணல் வழங்காமல் ஆன்லைனில் பதிவு செய்யாத லாரிகளுக்கு ஒரு லோடுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வாங்கிக்கொண்டு மணல் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இவ்விரு அதிகாரிகளும் 2013 முதல் 2017–ம் ஆண்டு மே மாதம் வரை திருச்சி, கரூர் மாவட்ட அரசு மணல் குவாரிகளில் பணிபுரிந்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். அரசாணைப்படி 6 சக்கர வாகனங்களில் 2 யூனிட் மணல் ரூ.1000–க்கும், 10 சக்கர வாகனங்களில் 3 யூனிட் மணல் ரூ.1500–க்கும் விற்பனை செய்யப்பட வேண்டும்.
இதற்கு மாறாக அதிக அளவில் பணம் பெற்று 8 யூனிட் மணல் வரை லாரிகளில் ஏற்றி பணம் சம்பாதித்துள்ளனர். இந்த பணத்தில் தமிழகம் முழுவதும் சொத்துக்கள் குவித்துள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு மணல் குவாரிகள் திட்ட இயக்குனருக்கு பல மனுக்கள் அனுப்பியும், இரு அதிகாரிகளும் தற்போதும் அதே இடங்களில் பணிபுரிகின்றனர். எனவே கடந்த 7 ஆண்டுகளாக அரசு மணல் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவும், உதவி பொறியாளர்கள் பொதுப்பணித்திலகம், சதீஷ்குமார் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்யவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் சுபாஷ்பாபு வாதிட்டார். அரசு வக்கீல் வாதிடுகையில், “மணல் குவாரிகளில் முறைகேடு நடைபெறவில்லை. ஆன்லைன் பதிவு அடிப்படையில் மணல் விற்பனை நடைபெறுகிறது. எனவே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றார்.
அப்போது, “கடந்த தலைமுறையில் தொடங்கிய ஊழல் தற்போதும் தொடர்கிறது. 80 சதவீதத்துக்கும் மேல் ஊழல் உள்ளது” என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
பின்னர் விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.