காளையார்கோவில் பகுதியில் மதுக்கடையை அகற்றக்கோரி மறியல் போராட்டம் நடத்த முடிவு
காளையார்கோவில் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மதுபானக்கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக முடிவு செய்துள்ளனர்.
காளையார்கோவில்,
காளையார்கோவில் 1–வது வார்டுக்குஉட்பட்ட மேட்டுப்பட்டி, பட்டரசன்கண்மாய், கிருஷ்ணாநகர், செந்தில்நகர் ஆகிய இடங்களில் மதுபானக்கடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடத்தை தேர்வு செய்து வருகின்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கடந்த ஏப்ரல் மாதம் 3–ந் தேதி இது சம்பந்தமாக காளையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசு அதிகாரிகள் முன்னிலையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மேற்கண்ட இடத்தில் புதிதாக மதுபான கடை அமைக்க மாட்டோம் என்று அதிகாரிகள் உறுதிஅளித்தனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக காளையார்கோவில் கிருஷ்ணாநகர் கிழக்கு பகுதியில் புதிதாக மது கடை ஒன்று திறக்கப்பட்டு தற்போது அவை இயங்கி வருகிறது. மேலும் இந்த பகுதியில் கோவில், பள்ளி மற்றும் குடியிருப்பு வீடுகள் உள்ளன. இதையடுத்து அப்பகுதி மக்கள் இந்த கடை திறந்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் கடையை அகற்றாவிட்டால் பொதுமக்களை ஒன்று திரட்டி சாலை மறியல் போராட்டம் மற்றும் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.