விவசாய விளைபொருட்களுக்கு நல்லவிலை கிடைக்க வழிவகை செய்யவேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்
விவசாய விளைபொருட்களுக்கு நல்லவிலை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கண்காணிப்புக்குழு கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
வேலூர்,
வேலூர் மாவட்ட அளவிலான ஆய்வு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் ராமன் முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு பேசியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த அனைத்து பணிகளுக்கும் தற்போதைய இலக்குகளை தாண்டி அதிகப்படியாக உற்பத்தியை பெருக்க அனைத்துத்துறை அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வேலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு அரசின் சார்பாக வழங்கப்படும் மானியங்கள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் வேளாண் கருவிகள் சார்ந்த திட்டங்கள் குறித்து போதிய அளவில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இயற்கை பேரிடரின்போது பயிர்சேதத்தின் விளைவாக விவசாயிகள் மரணம் நேரிட்டால் அதற்கான நிவாரணத்தை உடனடியாக வழங்குதல், அத்தகைய அசம்பாவிதத்தினை தடுத்திட வேண்டிய நடவடிக்கை எடுப்பது, விவசாயிகளுக்கு தேவையான விவசாய கடன்களை நிதிநிறுவனங்கள் மூலமாக உரியகாலத்தில் வழங்குவதை உறுதி செய்தல், கடன் வழங்கும் முறையை எளிமையாக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேலைஉறுதி திட்டத்தின்கீழ் வழங்கப்படும் வேலைவாய்ப்புகளை விவசாயிகளுக்கு தெளிவுபடுத்தவேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு நல்லவிலை கிடைக்க ஏதுவாக ஒழுங்குமுறை விற்பனைகூடங்களை வலுப்படுத்துதல், அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்புகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாய உற்பத்தியினை அதிகரித்து, விளைபொருட்களுக்கு நல்லவிலை கிடைக்க வழிவகை செய்யவேண்டும். அரசு மூலம் வழங்கப்படும் வேளாண் சேவைகளை வெளிப்படையாகவும், விரைவாகவும் வழங்க அதிகாரிகள் தங்கள் முழு பங்களிப்பை அளிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் சு.ரவி, ஜி.லோகநாதன், ஏ.பி.நந்தகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், வேளாண் இணை இயக்குனர் ராமலிங்கம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ராஜ்குமார், ஆவின் முன்னாள் தலைவர் வேலழகன், மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் ஏ.ஜி.விஜயன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story