விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சேலம்-சென்னை பசுமைசாலை திட்டத்தை கைவிட வேண்டும் - டி.டி.வி.தினகரன்


விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சேலம்-சென்னை பசுமைசாலை திட்டத்தை கைவிட வேண்டும் - டி.டி.வி.தினகரன்
x
தினத்தந்தி 23 Jun 2018 4:30 AM IST (Updated: 23 Jun 2018 12:53 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சேலம்-சென்னை பசுமைசாலை திட்டத்தை கைவிட வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுசெயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

விருதுநகர்,

விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:- தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் நடந்த துப்பாக்கி சூடு சம்பந்தமாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தி உள்ள நிலையில், போலீசார் மீது கூறும் குற்றச்சாட்டை போலீசாரே விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது நியாயமாகாது. ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் போது சமூக விரோதிகளும், தீவிரவாதிகளும் புகுந்துவிட்டதாக அரசு குற்றம்சாட்டுகிறது. இந்த போராட்டம் 100 நாட்கள் நடந்த போது அரசு இதை கண்காணித்து சமூகவிரோதிகள், தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க தவறியது ஏன்?

ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமில கசிவு பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் கூறுகிறார். ஆனால் அமில கசிவு பாதிப்பை ஏற்படுத்தும் என ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா குழுமம் கூறுகிறது. இவ்வாறு முரண்பட்ட தகவலை தெரிவித்தால் மக்கள் நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்படும்.

சேலம்-சென்னை இடையே பசுமை சாலை அமைக்கும் திட்டம் சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். விவசாயிகளுக்கும், சிறு தொழில்கள் செய்பவர்களுக்கும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். விவசாயம் அழிந்து போகும். சேலத்தை சேர்ந்த ஒரு மூதாட்டி கூறுவதை போல அங்குள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் உயிரையும், மனதையும் வைத்துள்ளனர். அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட்டு பசுமைசாலை திட்டத்தை நிறைவேற்ற துடிப்பது ஏன்? சென்னையில் இருந்து 3 மணி நேரத்தில் சேலம் வந்து சேருவதால் தமிழகத்தின் பொருளாதார நிலையில் மாற்றம் ஏற்பட்டுவிடுமா?

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். அவர் தனது மாவட்ட மக்களை சந்தித்து இந்த திட்டத்தை பற்றி விளக்கி கூறி அவர்களின் ஒப்புதலை பெற்ற பின்பு திட்டத்தினை நிறைவேற்ற வேண்டியது தானே? போலீசாரை வைத்து மிரட்டி விவசாயிகளையும், பொதுமக்களையும் தாக்கி பணிய வைப்பது என்பது ஏற்புடையது அல்ல. போலீசார் மக்களின் எண்ணத்தை அரசிடம் தெரிவிக்க வேண்டும். ஆனால் காவல்துறை, ஏவல் துறையாக மாறிவிட்டது.

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஜெயலலிதாவால் 5 முறை எம்.பி.யாக்கப்பட்டவர். தற்போதும் ஜெயலலிதாவின் தயவால் தான் அமைச்சராக இருக்கிறார். ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தில் தான் தினகரன் எம்.எல்.ஏ. ஆகி உள்ளார் என பேசுகிறார். அவர் காட்டு இலாகா மந்திரி. அவர் அப்படி தான் பேசுவார். அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எந்த மூத்த அ.தி.மு.க. நிர்வாகியும் கூறவில்லை. கடந்த 6 மாதங்களாக தமிழகத்தில் ஆட்சி நடத்துபவர்கள் சுதந்திரமாக தன்னிச்சையாக செயல்படுகிறார்கள். ஆர்.கே.நகர் தேர்தலின் போது என்னை துணைப்பொதுசெயலாளர் என அறிமுகப்படுத்தி, அடுத்து அ.தி.மு.க.வை இவர் தான் கட்டிகாப்பார் என கூறிய எடப்பாடி பழனிசாமி தற்போது மாறுதலாக பேசி வருகிறார்.

சேலம் பசுமை சாலை திட்டத்தினை எதிர்த்து பேசியவர்களை சமூகவிரோதிகள் என்று கூறுகிறார்கள். சமூக ஆர்வலர் பியூஸ், மாணவி வளர்மதி, நடிகர் மன்சூர்அலிகான் ஆகியோர் மக்களுக்கு ஆதரவாக பேசியதால் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்திட்டத்தை எதிர்த்து அனைத்து எதிர்கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாங்களும் போராட்டம் நடத்த உள்ளோம். மக்களுக்கு எதிரான திட்டத்தை நிறைவேற்றினால் இந்த ஆட்சி தூக்கி எறியப்படும். உடலில் ஒவ்வொரு பாகமும் படிப்படியாக செயல் இழந்து வருவதை போல இந்த ஆட்சியும் செயல் இழந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக விருதுநகர் போக்குவரத்து கழக பணிமனை முன்பு டி.டி.வி. தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொடியை ஏற்றி வைத்தார். அங்கு அவருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் இன்பதமிழன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.கே.சிவசாமி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ராஜ்குமார், மாவட்ட மாணவர் அணி செயலாளர் தங்கம், மகளிர் அணி செயலாளர் இந்திராமோகன், ஒன்றிய செயலாளர்கள் வாலைமுத்துச்சாமி, ஆறுமுகம், பழனி, துரைச்சாமி பாண்டியன், பந்தல்குடி முருகேசன், கருப்பு ராஜ், மாவட்ட அவைத்தலைவர் ராமர், நகர செயலாளர்கள் முத்து, சுகுமார்ராஜன், மாவட்ட பேரவை செயலாளர் வீரகணேசன், நகர இளைஞரணி நிர்வாகி லெனின், பேரவை பாலமுருகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Next Story