கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற நர்சிடம் நகை பறிப்பு; 2 கல்லூரி மாணவர்கள் கைது


கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற நர்சிடம் நகை பறிப்பு; 2 கல்லூரி மாணவர்கள் கைது
x
தினத்தந்தி 23 Jun 2018 2:30 AM IST (Updated: 23 Jun 2018 12:57 AM IST)
t-max-icont-min-icon

கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற நர்சிடம் நகை பறித்த 2 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை, 

கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற நர்சிடம் நகை பறித்த 2 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

நர்சிடம் நகை பறிப்பு

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் பாபு. இவருடைய மனைவி கவிதா (வயது 38). இவர், வடக்கு விஜயநாராயணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு, மாலையில் பஸ்சில் நெல்லை புதிய பஸ் நிலையம் வந்தார். பின்னர் அவர் தன்னுடைய கணவர் ரமேஷ் பாபுவுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

முன்னீர்பள்ளம் அருகே சுப்பிரமணியபுரம் பகுதியில் சென்றபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் திடீரென்று கவிதா கழுத்தில் அணிந்து இருந்த 2 பவுன் தங்க சங்க சங்கிலியை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். உடனே ரமேஷ் பாபு, கவிதா ஆகிய 2 பேரும் திருடன் திருடன் என்று கூச்சலிட்டனர்.

2 மாணவர்கள் கைது

அப்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வருகையையொட்டி பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அந்த மோட்டார் சைக்கிளை காரில் விரட்டிச் சென்றனர். சிறிது தூரத்தில் மோட்டார் சைக்கிளை போலீசார் வழிமறித்து, நகை பறித்த 2 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

போலீசாரின் விசாரணையில், நர்சிடம் நகை பறித்த 2 பேரும் பாலிடெக்னிக் மாணவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, நகையை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story