கார் சாகுபடிக்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி


கார் சாகுபடிக்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 23 Jun 2018 3:15 AM IST (Updated: 23 Jun 2018 1:07 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்ட அணைகளில் இருந்து நேற்று கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லை, 

நெல்லை மாவட்ட அணைகளில் இருந்து நேற்று கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அணைகளில் தண்ணீர் திறப்பு

தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்தது. இதனால் நெல்லை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்ந்தது. இதையடுத்து கார் சாகுபடிக்காக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்பேரில் கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார், கொடுமுடியாறு ஆகிய 5 அணைகளில் இருந்து நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கடையம் ராமநதி அணையில் நடந்த நிகழ்ச்சியில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி தலைமை தாங்கி அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். மாவட்ட கலெக்டர் ஷில்பா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் முத்துக்கருப்பன், பிரபாகரன், பூங்கோதை எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை நிர்வாக என்ஜினீயர் ஜெயபாலன், உதவி செயற்பொறியாளர் சங்கர்ராஜ், உதவி பொறியாளர் முருகேசன்உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேட்டி

பின்னர் அமைச்சர் ராஜலட்சுமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராமநதி அணையில் இருந்து கார் சாகுபடிக்கு வடகால், தென்கால், பாப்பான்கால் மூலம் 1,009 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடி பாசன வசதி பெறும். மேலும், கடனாநதி பாசன திட்டத்தில் அரசபத்துகால், வடகுருவபத்துகால், ஆழ்வார்குறிச்சி தென்கால், ஆம்பூர் பெருங்கால், மஞ்சம்புளிகால், காக்கநல்லூர்கால் ஆகிய கால்வாய்கள் மூலம் 3 ஆயிரத்து 988 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடி பாசன வசதி பெறும்.

அடவிநயினார் அணையில் இருந்து மேட்டுக்கால், கரிசல்கால், பண்பொழிகால், வல்லாக்குளம்கால், இலத்தூர்கால், நயினாகரம்கால், கிளங்காடுகால், கம்பிளிகால், புங்கன்கால், சாம்பவர்வடகரைகால் ஆகிய கால்வாய்கள் மூலம் 2 ஆயிரத்து 148 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடி பாசன வசதி பெறும். கருப்பாநதி அணையில் இருந்து பெருங்கால், பாப்பான்கால், சீவலன்கால் ஆகிய கால்வாய்கள் மூலம் 1,083 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடி பாசன வசதி பெறும்.

சிக்கனமாக...

கொடுமுடியாறு அணையில் இருந்து 2 ஆயிரத்து 549 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன பெறுகின்றன. அணைக்கு கூடுதல் நீர்வரத்து இருக்கும் பட்சத்தில், முன்னுரிமை அளிக்கப்பட்ட 2 ஆயிரத்து 549 ஏக்கர் நிலங்களின் குறைந்தபட்ச தேவைக்கு கூடுதலாக உள்ள நீரினை வடமலையான்கால் மூலம் பாசன வசதி பெறும் 3 ஆயிரத்து 232 ஏக்கர் நிலங்களுக்கு நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படும்.

இந்த அணைகளில் இருந்து அக்டோபர் மாதம் 24-ந் தேதி வரை 125 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். பொதுமக்கள், விவசாயிகள் நீரினை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ராஜலட்சுமி கூறினார்.

கடனாநதி- கருப்பாநதி

கடையம் கடனாநதி அணையில் நடந்த நிகழ்ச்சியில் முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, தண்ணீரை திறந்து வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ. சக்திவேல் முருகன், அ.தி.மு.க. மாவட்ட மாணவர் அணி செயலாளர் முருகேசன், உதவி செயற்பொறியாளர் மாரியப்பன், உதவி பொறியாளர் கணபதி, அந்தோணி, இளநிலை பொறியாளர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடையநல்லூர் கருப்பாநதி அணையில் நடந்த நிகழ்ச்சியில், செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, தண்ணீரை திறந்து வைத்தார். அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், ஒன்றிய செயலாளர் முத்துபாண்டியன், விவசாய சங்க தலைவர் ரத்தினவேல் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேக்கரை அடவிநயினார் அணையில் இருந்து செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. தண்ணீரை திறந்து வைத்தார். பொதுப்பணித்துறை உதவி கோட்ட பொறியாளர் மணிகண்டராஜ், உதவி பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், செங்கோட்டை நகர செயலாளர் குட்டியப்பா என்ற கிருஷ்ணமுரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கொடுமுடியாறு

ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையில் நடந்த நிகழ்ச்சியில் இன்பதுரை எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, தண்ணீரை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் மூர்த்தி, பாஸ்கர், அ.தி.மு.க. வள்ளியூர் ஒன்றிய செயலாளர் முருகானந்தம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சீனிவாசன், அமல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த அணைகள் திறக்கப்பட்டுள்ளதால் நெல்லை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story