நெல்லிக்குப்பம் அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பிளஸ்–1 மாணவி பலி


நெல்லிக்குப்பம் அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பிளஸ்–1 மாணவி பலி
x
தினத்தந்தி 23 Jun 2018 4:00 AM IST (Updated: 23 Jun 2018 1:31 AM IST)
t-max-icont-min-icon

நெல்லிக்குப்பம் அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பிளஸ்–1 மாணவி பலியானார்.

நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பிளஸ்–1 மாணவி பலியானார். படிக்கட்டில் நின்று பயணம் செய்தபோது தவறி விழுந்ததால் நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள பலாப்பட்டு காலனியை சேர்ந்தவர் அல்லிமுத்து. இவருடைய மகள் தனலட்சுமி(வயது 16). இவர் சி.என்.பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார்.

இதற்காக தினமும் காலையில் பட்டீஸ்வரத்தில் இருந்து எடையார்குப்பம், சி.என்.பாளையம் வழியாக நடுவீரப்பட்டுக்கு செல்லும் அரசு பஸ்சில் தனலட்சுமி சென்று வந்தார். இதற்காக அவர் பலாப்பட்டில் இருந்து எடையார்குப்பத்துக்கு நடந்து செல்வது வழக்கம்.

அதன்படி நேற்று காலையில் பட்டீஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட அரசு பஸ், எடையார்குப்பத்துக்கு வந்தபோது தனலட்சுமி பஸ்சில் ஏறினார். அந்த பகுதியில் இருந்து காலையில் வேறு பஸ் இல்லாததால் ஒரே பஸ்சில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர். பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால் தனலட்சுமி பஸ்சின் முன்பக்க படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்தார்.

இந்த பஸ் கொஞ்சிக்குப்பம் என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தபோது, தனலட்சுமி பஸ்சின் முன்பக்க படிக்கட்டு வழியாக தவறி கீழே விழுந்தார். அந்த பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் தனலட்சுமி சிக்கிக்கொண்டார். பஸ் சக்கரம் ஏறி, இறங்கியதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

விபத்து பற்றி தகவல் அறிந்ததும் நடுவீரப்பட்டு போலீசார் விரைந்து சென்று, தனலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story