பழனி கோடைகால நீர்த்தேக்கம் அருகே யானைகள் நடமாட்டம், பொதுமக்கள் அச்சம்


பழனி கோடைகால நீர்த்தேக்கம் அருகே யானைகள் நடமாட்டம், பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 23 Jun 2018 3:30 AM IST (Updated: 23 Jun 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

பழனி கோடைகால நீர்த்தேக்கம் அருகே யானைகள் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பழனி,

பழனி வனப்பகுதியில் யானை, கடமான், சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசிக்கின்றன. இவற்றை பாதுகாக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். வனப்பகுதியில் சுற்றித்திரியும் காட்டுயானைகள் சில நேரங்களில் உணவு, தண்ணீருக்காக பாலாறு–பொருந்தலாறு அணை, வரதமாநதி அணைப்பகுதிகளுக்கு வந்து செல்லும்.

அவை குடியிருப்பு பகுதிக்குள் புகாமல் தடுக்கும் பணியில் வேட்டை தடுப்பு காவலர்கள், வனப்பாதுகாவலர்கள் ஈடுபடுவார்கள். இந்த நிலையில் பழனியை அடுத்த புளியம்பட்டி அருகே உள்ள கோடைகால நீர்த்தேக்கம் அருகே கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கோடைகால நீர்த்தேக்கம் பகுதிக்கு 3 யானைகள் வருகின்றன. நீர்த்தேக்கத்தில் தண்ணீர் குடித்துவிட்டு நீர்த்தேக்கம் அருகே வளர்ந்துள்ள மரங்களை சேதப்படுத்துகின்றன. பின்னர் கொடைக்கானல் சாலைக்கு வந்து பலமணி நேரம் நிற்கின்றன. இதனால் இரவு நேரத்தில் வெளியில் செல்லவே அச்சமாக உள்ளது’ என்றனர்.

இதுகுறித்து வனச்சரகர் கணேஷ்ராமிடம் கேட்ட போது, தண்ணீர் குடிப்பதற்காகவே யானைகள் அப்பகுதிக்கு வருகின்றன. அவை குடியிருப்பு பகுதிக்குள் புகாமல் அங்கு ரோந்து பணியில் இருக்கும் வனத்துறையினர் தடுத்து மீண்டும் அவற்றை வனப்பகுதிக்குள் விரட்டுகின்றனர். எனவே பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றார்.


Next Story