உள்ளாட்சித்துறை பணிகளை 3 மாதத்தில் முடிக்க வேண்டும், அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவு
புதுவை உள்ளாட்சித்துறை மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி உள்ளாட்சித்துறை மூலமாக கடந்த 2017–18 ஆண்டில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளுடன் அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார்.
இதில் புதுச்சேரி நகராட்சி ஆணையர் சுதாகர், உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சீதாராமன், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மனோகர், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்திரராஜன் மற்றும் செயற்பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.
இதில் உள்ளாட்சித்துறை மூலமாக தொகுதி வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் எந்த அளவுக்கு நிறைவடைந்து உள்ளது. பணிகள் நிலுவையில் இருப்பதற்கான காரணங்கள் ஆகியவற்றை அதிகாரிகளிடம் அமைச்சர் நமச்சிவாயம் கேட்டறிந்தார்.
அதைத்தொடர்ந்து அவர், உள்ளாட்சித்துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை 3 மாதத்துக்குள் முடிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.