மழை நீரை சேகரிக்க அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - கவர்னர் கிரண்பெடி
மழைநீரை சேகரிக்க அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:–
புதுவை மாநிலத்தில் யாராக இருந்தாலும் பருவமழைக்காலத்தில் நிலத்தடி நீரை சேமிக்க உறுதிப்பாடு எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும். பிற மாநிலங்களைப்போல் புதுச்சேரியிலும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. அழகிய புதுச்சேரி காப்பாற்றப்பட வேண்டும் என்றால் மழைநீரை சேமிக்க பொறுப்பேற்க வேண்டும்.
இதற்கு அவரவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளோ, பதவிகளோ, இடமோ முக்கியமில்லை. சொந்த வீடு வைத்திருந்தாலும் நம்மால் எவ்வளவு அதிகம் மழைநீரை சேமிக்க முடியுமோ அவ்வளவு சேமிக்க வேண்டும். தற்போது பருவமழை காலங்களில் பெய்யும் மழைநீர் வாய்க்கால்கள் வழியாக வெளியேற்றப்படுகிறது.
அனைத்து தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பண்ணை நிலங்கள், பொது பூங்காக்கள், பண்ணை நிலங்கள், பொது பூங்காக்கள், நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை மற்றும் பிற துறைகளும் மழைநீரை சேமிக்க யாரும் முன்முயற்சி எடுப்பார்கள் என காத்திருக்கக்கூடாது. நிலத்தடி நீர் ஆணையம் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்களுடன் சேர்ந்து மழைநீர் சேகரிப்பதற்கான செயல் திறன்மிக்க அவசர நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
எங்களது சமீபத்திய ஆய்வுகள் பல்வேறு விதிமீறல்கள் இருப்பதை வெளிப்படுத்துகிறது. பெரிய அளவில் தண்ணீரை பயன்படுத்துபவர்களாக இருந்தாலும்கூட மழைநீரை சேமிப்பதில் கவனக்குறைவாகவே உள்ளனர். இந்த பருவமழைக்காலத்தில் நாம் மழைநீரை சேமிக்க வேண்டும். பிறருக்காக காத்திருக்காமல் அதை நீங்களே தொடங்குங்கள்.
இவ்வாறு கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.