அவினாசி பகுதியில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை திருடிய வழக்கில் வாலிபர் கைது: 19½ பவுன் நகை, கார் பறிமுதல்
அவினாசி பகுதியில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை திருடிய வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 19½ பவுன்நகைகள் மற்றும் ஒரு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவினாசி,
திருட்டு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது;-
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த சேவூரை சேர்ந்த வக்கீல் யோகேஸ். இவருடைய வீட்டின் பூட்டை 18.11.2017 அன்று மர்ம ஆசாமிகள் உடைத்து, வீட்டில் இருந்த 8 பவுன் நகையை திருடி சென்று விட்டனர். அதுபோல் தெக்கலூர் ஆதித்யா நகரை சேர்ந்த வியாபாரி கந்தசாமி என்பவருடைய வீட்டின் பூட்டை மர்ம ஆசாமிகள் உடைத்து வீட்டில் இருந்து 6 பவுன்நகையை திருடி சென்று விட்டனர். அவினாசி காமராஜர் நகரை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 3½ பவுன் நகையை மர்ம ஆசாமிகள் 17.6.2018 அன்று திருடி சென்று விட்டனர். கடந்த 19.6.2018 அன்று அவினாசிலிங்கம்பாளையம் தந்தை பெரியார்நகரை சேர்ந்த இந்திராவாசு என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 4½ பவுன்நகையை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர்.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து வீட்டின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட ஆசாமிகளை பிடிக்க அவினாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பரமசாமி உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் அவினாசி அருகே மொண்டிநாதம்பாளையம் பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த காரை நிறுத்தி, அந்த காரை ஓட்டி வந்தவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.
இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 27) என்றும், மேற்கண்ட 4 வீடுகளின் பூட்டை உடைத்து நகையை திருடியதாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். இதையடுத்து வீடுகளின் பூட்டை உடைத்து நகை திருடிய வழக்கில் சுரேசை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஓட்டிவந்த காரையும், அவரிடம் இருந்து 19½ பவுன் நகையையும்,காரில் அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சுரேசை அவினாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story