காவிரி மேலாண்மை ஆணையம்: நிபந்தனைகளுடன் மத்திய அரசுக்கு உறுப்பினர்கள் பெயர் அனுப்பப்படும் முதல்–மந்திரி குமாரசாமி பேட்டி


காவிரி மேலாண்மை ஆணையம்: நிபந்தனைகளுடன் மத்திய அரசுக்கு உறுப்பினர்கள் பெயர் அனுப்பப்படும் முதல்–மந்திரி குமாரசாமி பேட்டி
x
தினத்தந்தி 23 Jun 2018 3:00 AM IST (Updated: 23 Jun 2018 2:35 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான கர்நாடக உறுப்பினர்களின் பெயர்கள் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்று முதல்–மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான கர்நாடக உறுப்பினர்களின் பெயர்கள் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்று முதல்–மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

உறுப்பினர்களை நியமிக்கவில்லை

காவிரி நதிநீரை பங்கீட்டு கொள்வது தொடர்பாக கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, மத்திய அரசும் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்துள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் தங்களின் பிரநிதிகளை நியமித்துள்ளன. ஆனால் கர்நாடக மாநிலம் சார்பில் மட்டும் இன்னும் உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை.

இதற்கிடையே, ‘‘10 நாட்களுக்கு ஒருமுறை காவிரி மேலாண்மை ஆணையம், காவிரியின் குறுக்கே அமைந்துள்ள அணைகளை ஆய்வு செய்து தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடும் என கூறி இருப்பது கர்நாடகத்திற்கு எதிரானது. காவிரி ஆணைய விதிமுறைகளில் கர்நாடகத்திற்கு பாதகமான மற்றும் விஞ்ஞானத்திற்கு மாறான அம்சங்கள் உள்ளன. எனவே அதனை நீக்க வேண்டும், காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்’’ உள்ளிட்ட நிபந்தனைகளை கர்நாடக அரசு விதித்துள்ளது.

இதுகுறித்து பெங்களூருவில் நேற்று முதல்–மந்திரி குமாரசாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:–

எந்த பிரச்சினையும் இல்லை

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடகம் சார்பில் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் மத்திய அரசுக்கு உறுப்பினர்கள் பெயர் அனுப்பப்படும். பெயர்களை அனுப்புவதில் எந்த பிரச்சினையும் இல்லை. நிபந்தனைகள் என்ன? என்பதை நான் ஏற்கனவே கூறியுள்ளேன். எல்லா பிரச்சினைகளும் சுமூகமாக தீர்க்கப்படும். கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையில் தொடர்புடைய மற்றவர்களை உடனடியாக கைது செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

விஜயாப்புராவில் ரவுடி கொலை செய்யப்பட்டதில் போலீசாருக்கு தொடர்பு உள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த கொலை கடந்த ஆட்சியில் நடந்துள்ளது. புதிய அரசு அமைந்த பின்பு கொலை நடக்கவில்லை. மதக்கலவரங்களில் ஈடுபடும் அமைப்புகள், சங்கங்கள் மீதும், மதக்கலவரங்களை தூண்டுபவர்கள் மீதும் பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.


Next Story