மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கு குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் குமாரசாமி ஆலோசனை சட்டவிரோத செயல்களில் போலீசார் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை


மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கு குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் குமாரசாமி ஆலோசனை  சட்டவிரோத செயல்களில் போலீசார் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 23 Jun 2018 4:30 AM IST (Updated: 23 Jun 2018 2:45 AM IST)
t-max-icont-min-icon

மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் முதல்–மந்திரி குமாரசாமி ஆலோசனை நடத்தினார்.

பெங்களூரு, 

மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் முதல்–மந்திரி குமாரசாமி ஆலோசனை நடத்தினார். சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

புதிய செல்போன் செயலி

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்–மந்திரியாக குமாரசாமியும், துணை முதல்–மந்திரியாக பரமேஸ்வரும் உள்ளனர். இந்த நிலையில், புதிய அரசு பதவி ஏற்ற பின்பு உயர் போலீஸ் அதிகாரிகளுடன் பெங்களூருவில் உள்ள மாநில போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் முதல்–மந்திரி குமாரசாமி, துணை முதல்–மந்திரி பரமேஸ்வர் ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் ரத்னபிரபா, மாநில போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜு, பெங்களூரு போலீஸ் கமி‌ஷனர் சுனில்குமார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டத்தில் மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் குமாரசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் குற்றங்கள் நடைபெறுவது குறித்தும், பொதுமக்களுக்கு ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால், அதுபற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க புதிய செல்போன் செயலியை முதல்–மந்திரி குமாரசாமி அறிமுகப்படுத்தினார்.

குமாரசாமி எச்சரிக்கை

அதே நேரத்தில் மாநிலத்தில் குற்ற சம்பவங்கள் நடைபெறும் முன்பாக, அதனை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், ரவுடிகளை ஒடுக்கவும் போலீஸ் அதிகாரிகளுக்கு குமாரசாமி உத்தரவிட்டார். குறிப்பாக மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு போலீசார் ஒரு போதும் துணை போகக்கூடாது என்றும், பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலித்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்–மந்திரி குமாரசாமி எச்சரித்தார்.

பின்னர் முதல்–மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட...

மாநிலத்தில் புதிய அரசு ஆட்சிக்கு வந்த பின்பு முதல் முறையாக போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். குறிப்பாக சட்டம்–ஒழுங்கு, பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக பேசினேன். போலீஸ் துறையில் உள்ள பிரச்சினைகளை தீர்க்கவும், அதனை சரிசெய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் போலீஸ் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளேன். போலீஸ் துறை முக்கியமான துறையாகும். புதிய அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்றாலும், அது போலீஸ் துறையால் மட்டுமே முடியும்.

மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது, ரவுடிகளிடம் இருந்து மக்களை பாதுகாப்பது, மக்கள் அமைதியாக வாழ வழிவகுத்து கொடுப்பது போலீசாரின் கடமையாகும். அதற்காக தான் மக்களுக்கு உதவி புரியும் வகையில் எஸ்.ஓ.எஸ். என்ற புதிய செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த செயலி மூலம் பொதுமக்கள் தங்களுக்கு எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி, தங்கள் கண்முன்னே குற்றம் நடந்தாலும் சரி, புகார் தெரிவிக்க வேண்டுமானலும் சரி, தாங்கள் இருந்த இடத்தில் இருந்து கொண்டே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க முடியும். இது மாநில மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

குற்றங்களை தடுக்க உத்தரவு

மாநிலத்தில் குற்றங்களை தடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். மக்களுடன் போலீசார் நட்புறவுடன் இருக்க வேண்டும். போலீசார் மீது மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டியது அவசியம். போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வருபவர்களுடன் நட்புறவுடன் நடந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு புகாரையும் நிராகரிக்க கூடாது.

கவுரி லங்கேஷ் கொலையில் கைதாகி இருப்பவர்களை போலீஸ் அதிகாரிகள் துன்புறுத்தி வருவதாக வெளியாகும் தகவல்கள் உண்மையல்ல. போலீசார் யாரையும் துன்புறுத்தவில்லை. கைதானவர்களிடம் சரியான முறையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

ஆலோசனை கூட்டத்துக்கு அதிகாரிகள் செல்போன் எடுத்து செல்ல தடை

பெங்களூருவில் உள்ள மாநில போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் நேற்று உயர் போலீஸ் அதிகாரிகளுடன் முதல்–மந்திரி குமாரசாமி ஆலோசனை நடத்தினார். முன்னதாக தனது தலைமையில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளும் அதிகாரிகள் செல்போன் பயன்படுத்த அனுமதியில்லை என்று முதல்–மந்திரி குமாரசாமி கூறி இருந்தார். அதன்படி, நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்திலும் போலீஸ் அதிகாரிகள் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் போலீஸ் அதிகாரிகள் தங்களது செல்போன்களை, ஒரு கவரில் தங்களது பெயரை எழுதி, அதற்குள் போட்டு அங்கிருந்த போலீஸ்காரர்களுடன் கொடுத்துவிட்டு சென்றனர். போலீஸ் அதிகாரிகளுடன் செல்போன்களை வாங்கி பாதுகாக்க ஒரு பெண் போலீஸ் உள்பட 3 போலீஸ்காரர்கள் ஈடுபட்டு இருந்தார்கள்.


Next Story