போலீஸ் அதிகாரியை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற வாலிபரை துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர்
பெங்களூருவில் ரவுடியை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய வாலிபர், போலீஸ் அதிகாரியை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றபோது துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார்.
பெங்களூரு,
பெங்களூருவில் ரவுடியை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய வாலிபர், போலீஸ் அதிகாரியை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றபோது துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார்.
ரவுடி கொலைபெங்களூரு கே.ஆர்.புரம் அருகே சி.கே.ஹள்ளியை சேர்ந்தவர் மஞ்சுநாத் என்ற வாட்டர் மஞ்சா, ரவுடி. அவர், வீடுகள் மற்றும் கடைகளுக்கு தண்ணீர் கேன்கள் விற்கும் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி, பழைய மெட்ராஸ் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் தண்ணீர் கேன்களை விற்றுவிட்டு மஞ்சுநாத் வெளியே வந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்மநபர்கள் மஞ்சுநாத்தை கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தார்கள்.
இதுகுறித்து கே.ஆர்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர். மேலும் மர்மநபர்களை பிடிக்க 4 தனிப்படையும் அமைக்கப்பட்டது. ஓட்டல் மற்றும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி தனிப்படை போலீசார் ஆய்வு செய்தார்கள். அப்போது அங்குள்ள ஒரு கேமராவில் சி.கே.ஹள்ளியை சேர்ந்த சரண்ராஜ்(வயது 34), அவரது கூட்டாளிகள் ரகு, முரளியின் உருவம் பதிவாகி இருந்தது. மஞ்சுநாத்தை சரண்ராஜ் தான் தீர்த்து கட்டியது தெரிந்தது. இதையடுத்து, சரண்ராஜ் உள்பட 3 பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.
போலீஸ் அதிகாரி மீது தாக்குதல்இந்த நிலையில், நேற்று அதிகாலை 5 மணியளவில் காடுகோடி அருகே சரண்ராஜ் ஸ்கூட்டரில் செல்வது பற்றி கே.ஆர்.புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமுக்கு தகவல் கிடைத்தது. உடனே இன்ஸ்பெக்டர் ஜெயராம், மகாதேவபுரா போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாஸ் மற்றும் போலீசார் காடுகோடிக்கு விரைந்து சென்றனர். பின்னர் காலை 5.45 மணியளவில் காடுகோடி அருகே பேலூரு கிராசில் வைத்து சரண்ராஜை போலீசார் சுற்றி வளைத்தனர். ஆனால் அவர் போலீசாரின் பிடியில் இருந்து தப்பித்து கே.தொம்மசந்திரா பகுதியை நோக்கி ஸ்கூட்டரில் சென்றார். அவரை போலீசார் விரட்டி சென்றனர்.
பின்னர் சிறிது தூரத்தில் சரண்ராஜை போலீசார் மடக்கினார்கள். உடனே உதவி சப்–இன்ஸ்பெக்டர் நாராயணசாமி, சரண்ராஜை பிடிக்க முயன்றார். அப்போது தன்னிடம் இருந்த கத்தியால் நாராயணசாமியை சரண்ராஜ் தாக்கினார். இதில், அவரது கையில் பலத்தகாயம் ஏற்பட்டது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ஜெயராம் வானத்தை நோக்கி 2 ரவுண்டு துப்பாக்கியால் சுட்டுவிட்டு, சரணடைந்து விடும்படி சரண்ராஜை எச்சரித்தார். ஆனால் அவர் சரண் அடைய மறுத்துவிட்டு தப்பி ஓட முயன்றார்.
துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்இதையடுத்து, சரண்ராஜை நோக்கி இன்ஸ்பெக்டர் ஜெயராம் துப்பாக்கியால் 2 ரவுண்டு சுட்டார். இதில், ஒரு குண்டு அவரது காலில் பாய்ந்தது. இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். உடனே அவரை போலீசார் பிடித்து கைது செய்தார்கள். பின்னர் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சரண்ராஜ் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதுபோல, படுகாயம் அடைந்த உதவி சப்–இன்ஸ்பெக்டர் நாராயணசாமியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையில், மஞ்சுநாத் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த சரண்ராஜின் கூட்டாளிகளான ரகு மற்றும் முரளியையும் கே.ஆர்.புரம் போலீசார் கைது செய்தார்கள். விசாரணையில், நிலத்தகராறில் மஞ்சநாத்தை சரண்ராஜ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டியது தெரியவந்தது. கைதான 3 பேர் மீதும் கே.ஆர்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு நகரில் கடந்த ஒரு வாரத்தில் 3–வது துப்பாக்கி சூடு சம்பவம்
பெங்களூரு நகரில் சமீப காலமாக கொலை, திருட்டு, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்கள் மற்றும் ரவுடிகளை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இந்த நிலையில் பெங்களூரு நகரில் கடந்த ஒரு வாரத்திற்குள் 2 துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளது. இந்த நிலையில் நேற்று 3–வதாக சரண்ராஜையும் போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். அதாவது, கடந்த 18–ந்தேதி சங்கிலி பறிப்பு கொள்ளையனான அச்சித்குமாரையும், கடந்த 20–ந் தேதி ரவுடிகள் ரபீக், சுதாகரையும் துப்பாக்கியால் சுட்டு பிடித்தது குறிப்பிடத்தக்கதாகும்.