நாகர்கோவிலில் பழமை வாய்ந்த கலைவாணர் கலை அரங்கத்தை இடிக்கும் பணி திடீர் நிறுத்தம்


நாகர்கோவிலில் பழமை வாய்ந்த கலைவாணர் கலை அரங்கத்தை இடிக்கும் பணி திடீர் நிறுத்தம்
x
தினத்தந்தி 22 Jun 2018 11:00 PM GMT (Updated: 22 Jun 2018 9:32 PM GMT)

நாகர்கோவிலில் பழமை வாய்ந்த கலைவாணர் கலை அரங்கத்தை இடிக்கும் பணி நேற்று திடீரென நிறுத்தப்பட்டதோடு கலையரங்கத்தை பூட்டி ‘சீல்‘ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் நகரில் வடசேரி அண்ணா விளையாட்டு மைதானத்தின் அருகே கலைவாணர் கலை அரங்கம் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கலை அரங்கத்தில் நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் நடைபெற்று வந்தன. ஆனால் தற்போது இந்த கலை அரங்கத்தின் பயன்பாடு குறைந்து விட்டது. இதனால் கலை அரங்கத்தில் பட்டாசுகள் மற்றும் ஹெல்மெட் விற்க நகராட்சி நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி கடந்த சில ஆண்டுகளாக கலைவாணர் கலையரங்கம் தனியார் பட்டாசு கடை போலவே காட்சி அளித்தது.

எனினும் கலைவாணர் கலை அரங்கம் மிகவும் பாழடைந்து காணப்பட்டதாலும், பயன்பாடு குறைந்ததாலும் அதை இடித்து அகற்றி விட்டு அந்த இடத்தில் நகராட்சி அலுவலகம் கட்ட நகராட்சி நிர்வாகத்தால் தீர்மானிக்கப்பட்டது. இதற்காக அங்கு செயல்பட்டு வந்த பட்டாசு கடையை அகற்றும்படி அதன் உரிமையாளரிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் பட்டாசு கடையை அகற்றவில்லை என்று கூறப்படுகிறது. கலை அரங்கத்தில் தற்போது சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் இருக்கின்றன. இதனால் கலை அரங்கத்தை இடிக்கும் பணி தாமதமாகி வந்தது.

இந்த நிலையில் கலைவாணர் கலை அரங்கத்தை உடனே இடித்து அகற்றும்படி நகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவிட்டார். அதன்படி கலை அரங்கத்தை இடிக்கும் பணி நேற்று காலை தொடங்கியது. முதலில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. பின்னர் மேற்கூரையை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த பணிகள் நடைபெற்று கொண்டு இருந்தாலும் கலை அரங்கத்தில் வைத்திருந்த பட்டாசுகளை சம்பந்தப்பட்டவர்கள் அகற்றாமல் இருந்தனர்.

இதைத் தொடர்ந்து பட்டாசுகளை பார்வையிடவும், மேற்கொண்டு அவற்றை என்ன செய்வது என்று தீர்மானிப்பதற்காகவும் சிவகாசியில் இருந்து வெடி பொருள் கட்டுப்பாட்டு அதிகாரி பாண்டே தலைமையிலான குழுவினர் நேற்று மதியம் நாகர்கோவில் வந்தனர். பின்னர், கலைவாணர் கலை அரங்கத்தில் வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகளை அவர்கள் பார்வையிட்டனர். எவ்வளவு பட்டாசுகள் இருக்கிறது? என்பதை ஆய்வு செய்த அதிகாரிகள், பிறகு புறப்பட்டு சென்றனர்.

இதற்கிடையே கலை அரங் கத்தை இடிக்கும் பணி திடீரென நிறுத்தப்பட்டது. மேற்கொண்டு எந்த பணிகளும் நடைபெறவில்லை. சிறிது நேரத்தில் கலை அரங்கத்தின் ஷட்டர்களை நகராட்சி அதிகாரிகள் அடைத்தனர். மேலும், கலை அரங்கத்துக்கு செல்லும் நுழைவு வாயில் கேட்டையும் பூட்டி ‘சீல்‘ வைத்தனர். அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி நகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘கலைவாணர் கலை அரங்கத்தை இடித்து அகற்றும் பணி தொடங்கி இருக்கிறது. ஆனால் தற்போது அங்குள்ள பட்டாசுகள் அகற்றப்படாமல் இருக்கிறது. இதனால் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள இயலவில்லை. இதைத் தொடர்ந்து பட்டாசுகளை வெடி பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அவர்கள் பட்டாசுகளை அகற்றுவது தொடர்பாக அறிக்கை கொடுத்ததும் மீண்டும் கலை அரங்கத்தை இடிக்கும் பணிகள் தொடங்கப்படும்‘ என்றார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போது கலைவாணர் கலை அரங்கம் கட்டப்பட்டது. அப்போது இந்த அரங்கத்துக்கு கலைஞர் கலை அரங்கம் என்று பெயர் சூட்டப்பட்டு இருந்தது. தி.மு.க. மாநில மாநாடு கலைஞர் கலை அரங்கத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கருணாநிதி பங்கேற்று பேசினார். அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பிறகு கலைஞர் கலை அரங்கத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதாவது நாகர்கோவில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த ஊர் என்பதால் கலைவாணர் கலை அரங்கம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிறகு கலைவாணர் கலை அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்போதைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். பங்கேற்றுள்ளார். அவருடன் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும் வந்து நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார். இதே போல மேலும் பல தலைவர்கள் கலைவாணர் கலை அரங்கத்துக்கு வந்துள்ளனர்.

இந்த கலை அரங்கம் முதலில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்தது. அதன் பிறகு நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது. நகராட்சி கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு இந்த கலை அரங்கம் வாடகைக்கு விடப்பட்டது. அதாவது நாடகம், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை இந்த கலை அரங்கத்தில் நடந்தன. மேலும் திரைப்படமும் திரையிடப்பட்டுள்ளது.

இவ்வாறு நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் அப்போதைய நாகர்கோவில் நகர மக்களின் ஒரே பொழுது போக்கு இடமாக கலைவாணர் கலை அரங்கம் விளங்கியிருக்கிறது. ஆனால் அதன் பிறகு படிப்படியாக பயன்பாடு குறைந்து கலைவாணர் கலை அரங்கம் தற்போது இடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

Next Story