சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு; மகனுடன் நகராட்சி ஊழியர் கைது


சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு; மகனுடன் நகராட்சி ஊழியர் கைது
x

தாம்பரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறில் ஈடுபட்ட தாம்பரம் நகராட்சி ஊழியர் மற்றும் அவருடைய மகனை போலீசார் கைது செய்தனர்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம், திருநீர்மலை சாலையை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 35). இவர், கடந்த 16-ந் தேதி திருநீர்மலை சாலை, பர்மா காலனி பகுதியில் உள்ள அவருடைய மாமியார் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்குள்ள கோவில் அருகே சிலர் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். இதனை கண்ட பாலமுருகன், அவர்களிடம் தட்டிக்கேட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், பாலமுருகனை தாக்கியதுடன், பீர்பாட்டிலால் அவரது முகத்தில் அடித்தனர். இதில் காயம் அடைந்த பாலமுருகன், இதுபற்றி தாம்பரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன், சப்-இன்ஸ்பெக்டர் சுகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தாம்பரம் நகராட்சியில் டிரைவராக வேலை செய்து வரும் திருநீர்மலை சாலையை சேர்ந்த தாமோதரன்(50) என்பவருடைய மகன் கிரண்(24) மற்றும் அதே பகுதியை சேர்ந்த அவருடைய நண்பர்கள் கோல்டு மணி (24), சதீஷ்குமார் (23), பெஞ்சமின் (23) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது தாம்பரம் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்தநிலையில் தனது மகனை போலீசார் கைது செய்ததை அறிந்த தாமோதரன், தனது மற்றொரு மகன் கிருஷ்ணன் என்பவருடன் தாம்பரம் போலீஸ் நிலையம் சென்று, உடனடியாக தனது மகன் கிரணை விடுதலை செய்யவேண்டும் என்றும், புகார் செய்த பாலமுருகனை, புகாரை வாபஸ் பெறும்படி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த வழக்கை விசாரித்த சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரை பணிசெய்யவிடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்குப்பதிவு செய்த போலீசார், நகராட்சி ஊழியர் தாமோதரன் மற்றும் அவருடன் வந்த மகன் கிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர்.aA

Next Story