ஏ.சி. வேலை செய்யாததால் நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரெயில் தற்காலிகமாக சேவை ரத்து


ஏ.சி. வேலை செய்யாததால் நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரெயில் தற்காலிகமாக சேவை ரத்து
x
தினத்தந்தி 23 Jun 2018 4:00 AM IST (Updated: 23 Jun 2018 3:57 AM IST)
t-max-icont-min-icon

ஏ.சி. வேலை செய்யாததால் ஏ.சி. மின்சார ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து ரெயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

மும்பை,

ஏ.சி. வேலை செய்யாததால் ஏ.சி. மின்சார ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து ரெயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

ஏ.சி. வேலை செய்யவில்லை

மும்பையில் கடந்த டிசம்பர் மாதம் ஏ.சி. மின்சார ரெயில் சேவை தொடங்கப்பட்டது. ஏ.சி. ரெயில் சேவை மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் விரார் - சர்ச்கேட் இடையே இயக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை 7.54 மணிக்கு போரிவிலியில் இருந்து சர்ச்கேட் நோக்கி ஏ.சி. ரெயில் ஒன்று புறப்பட்டது. இந்த ரெயிலில் ஏ.சி. வேலை செய்யவில்லை.

முதலில் பயணிகள் சிறிது நேரத்தில் ஏ.சி. செயல்பட தொடங்கும் என நினைத்து இருந்தனர். ஆனால் வெகுநேரமாகியும் ரெயிலில் ஏ.சி. செயல்படவில்லை. இதுகுறித்து பயணிகள் மோட்டார் மேனிடம் தொடர்ந்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

நடுவழியில் நிறுத்தப்பட்டது

இந்தநிலையில் ரெயில் பெட்டிக்குள் வெப்பநிலை அதிகரித்து பயணிகளுக்கு வேர்த்துக்கொட்டத் தொடங்கியது. மேலும் பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தொடர்ந்து ரெயிலில் பயணம் செய்ய முடியாதநிலை ஏற்பட்டவுடன் பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதையடுத்து அந்தேரியில் ஏ.சி. ரெயில் நிறுத்தப்பட்டது.

அதில் இருந்த பயணிகள் ரெயிலில் ஏ.சி. வேலை செய்யாதது குறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர், ரெயில்வே ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து நேற்று ஏ.சி. ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும் அந்த ரெயில் பழுது பார்க்கும் பணிக்காக மகாலெட்சுமி பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

பயணிகள் அவதி

இந்தநிலையில் ஏ.சி. மின்சார ரெயிலில் ஏ.சி. வேலை செய்யாமல் போன சம்பவத்திற்கு மேற்கு ரெயில்வே பயணிகளிடம் மன்னிப்பு கேட்டது. மேலும் பழுது பார்ப்பு பணிகள் முடிந்து விரைவில் ஏ.சி. மின்சார ரெயில் சேவை தொடங்கப்படும் என மேற்கு ரெயில்வே தனது டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டு இருந்தது.

ஏ.சி. வேலை செய்யாமல் மின்சார ரெயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை தான் ஏ.சி. மின்சார ரெயிலில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story