அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிவுறுத்தல்


அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 23 Jun 2018 5:09 AM IST (Updated: 23 Jun 2018 5:09 AM IST)
t-max-icont-min-icon

‘அங்கன்வாடி பணியாளர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும்’ என கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிவுறுத்தினார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நாமக்கல் வந்த கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று காலை பஸ் நிலையத்தில் தூய்மை இந்தியா ரதம், விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அனைத்துத் துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சி அரங்குகளை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து நாமக்கல் அண்ணாநகருக்கு சென்ற கவர்னர் அங்கு தூய்மை இந்தியா திட்டம் சார்பில் தொடங்கப்பட்டு உள்ள சமுதாய சுகாதார வளாகத்தை பார்வையிட்டார். பின்னர் அங்கு கூடியிருந்த பெண்களிடம் கலந்துரையாடினார்.

இதையடுத்து காலை 11.30 மணி முதல் நாமக்கல் சுற்றுலா மாளிகையில் பல்வேறு தரப்பினரிடமும் கவர்னர் மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது சுற்றுலா மாளிகையின் பிரதான நுழைவு வாயில் பூட்டப்பட்டு, மனுவுடன் வந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மதியம் 12.30 மணி வரை மனுக்கள் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 12 மணிக்கு பிறகு வந்தவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

அப்போது அங்கு வந்த பா.ஜனதா மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகளையும் போலீசார் உள்ளே அனுமதிக்க மறுத்தனர். இதனால் போலீசாருடன் பா.ஜனதாவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு மனு வைத்திருப்பவர்கள் மட்டும் உள்ளே செல்ல அனுமதி அளித்தார். அப்போது அங்கு திரண்டு இருந்த நிருபர்கள் மற்றும் புகைப்படக்காரர்களும் சுற்றுலா மாளிகை வளாகத்திற்குள் செல்ல அனுமதி அளிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.

முன்னதாக நேற்று காலை 10 மணியளவில் நாமக்கல் மலையாண்டி தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கவர்னர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது குழந்தைகள் அவருக்கு ரோஜா மலர்களை கொடுத்து வரவேற்றனர். ரோஜா மலர்களை பெற்றுக்கொண்ட கவர்னர், குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார்.

மேலும் அங்கு குழந்தைகள் படிக்க வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை வாங்கி பார்த்தார். அந்த புத்தகங்கள் குறித்தும், குழந்தைகளுக்கு விளையாட்டுடன் கற்பித்தல் முறை குறித்தும் கலெக்டர் ஆசியா மரியம் விளக்கம் அளித்தார். பின்னர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை மற்றும் செயல்பாடுகள் குறித்து கலெக்டரிடம் கவர்னர் கேட்டறிந்தார்.

அங்கன்வாடி மையத்தை பார்வையிட்ட பிறகு வெளியில் வந்த கவர்னர் பன்வாரிலால் புரோகித் அங்கு கூடியிருந்த அங்கன்வாடி ஊழியர்களிடம் பேசினார். அப்போது, இந்த பணி செய்யும் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். நீங்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். கட்டிடத்துக்கு அடித்தளம் பலமாக இருந்தால் தான் கட்டிடம் நன்றாக இருக்கும். அதுபோன்று குழந்தைகளுக்கு நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது என்றார்.

முன்னதாக அங்கன்வாடி மையத்துக்கு வந்த கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இந்த நிகழ்ச்சிகளில் பி.ஆர்.சுந்தரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கவர்னர் வருகையை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தலைமையில் நாமக்கல் நகர் முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

Next Story