மருத்துவ உலகின் விடிவெள்ளி எய்ம்ஸ்


மருத்துவ உலகின் விடிவெள்ளி எய்ம்ஸ்
x
தினத்தந்தி 23 Jun 2018 12:46 PM IST (Updated: 23 Jun 2018 12:46 PM IST)
t-max-icont-min-icon

அகில இந்திய மருத்துவ கழகத்தின் உயர்சிகிச்சை மருத்துவமனை (எய்ம்ஸ்) மதுரை அருகிலுள்ள தோப்பூரில் வருவது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

அகில இந்திய மருத்துவ கழகம் என்பது மத்திய அரசால் செயல்படுத்தப்படும் 3-ம் நிலை மருத்துவமனையாகும். அதிநவீன சிகிச்சைகள், கருவிகள், மருத்துவர்கள், கல்விகள், ஆராய்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு உயரிய அதிநவீன மருத்துவமனை எய்ம்ஸ் ஆகும். எம்.பி.பி.எஸ்., பட்ட மேற்படிப்பு மற்றும் செவிலிய படிப்புகள் படிப்பதற்கான வசதிகளும் இதனுள் அடங்கும்.

எய்ம்ஸ் மருத்துவமனை இந்தியாவில் டெல்லி, சண்டிகர் போன்ற பல வடமாநிலங்களிலும் தெற்கே புதுச்சேரியிலும் மிக சிறப்பான முறையில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த சிறப்புமிகுந்த மருத்துவமனை நமது தமிழகத்தில் அமைவது தமிழக மக்களுக்கு பெருமை. மதுரை அருகில் அமைவது தென்தமிழக மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

இன்று மருத்துவ உலகில் பல வகையான நோய்கள் தினமும் வந்து கொண்டே இருக்கிறது. எய்ட்ஸ் முதல் நிபா வைரஸ் வரை பரவிக்கொண்டு இருக்கின்றன. இன்னும் புற்றுநோய், சர்க்கரை நோய், இருதய நோய், மூச்சுத் திணறல் வியாதிகளால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தினமும் இருதய வியாதிகள், சிறுநீரக வியாதிகள், மூளை ரத்தக் கசிவு போன்ற பாதிப்பால் ஏராளமான உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன.

தென்தமிழகத்தின் மிகச்சிறந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பல இயங்கி கொண்டிருக்கிறது. இருந்தாலும் எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகள் தமிழகத்துக்கு அவசியமாகிறது.

ஏனென்றால் இருதய அடைப்பால் ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் பைபாஸ் அறுவை சிகிச்சை, சிறுநீரக தோல்வியால் மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை, கல்லீரல் கெட்டுப்போவதால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, இருதயம் விரிந்து செயல்படாமல் போவதால் இருதய மாற்று அறுவை சிகிச்சை போன்ற பல அறுவை சிகிச்சைகள் தினமும் நடக்கின்றன.

மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் அடைத்து மூளை செயல்படாமல் உயிரிழப்பு ஏற்படுகிறது. கை மற்றும் கால்களுக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் அடைத்து கை மற்றும் கால்கள் செயல்படாமல் உயிரிழப்பு ஏற்படுகிறது. புற்றுநோய்களால் மக்கள் அவதிப்பட்டு உயிரிழக்கிறார்கள்.

சிறப்பாக செயல்பட இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் ஒரு விடிவெள்ளியாக இருக்கும். மனித உடலிலுள்ள எல்லா உறுப்புகளுக்கும் சிறப்பாக நோய் கண்டறியும் முறைகளும், தரமான சிகிச்சைகளும் இங்கு அளிக்கப்படும்.

பல்வேறு மருத்துவ நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதுடன் அந்த நோய் எதனால் வந்தது என்று பரிசோதனை மற்றும் ஆராய்ச்சி செய்வதற்கு உறுதுணையாக எய்ம்ஸ் மருத்துவமனை இருக்கும். மேலும் இந்த மருத்துவமனை மத்திய அரசின் நேரடி பார்வையில் இயங்குவதால் சிகிச்சைக்கான நவீன கருவிகள் வாங்குவதற்கும், மேல் பரிசோதனைக்கு ஆராய்ச்சிக் கூடங்கள் அமைவதற்கும் வாய்ப்பாக அமையும்.

மருத்துவர்கள் முழு நேரம் மக்களுக்கு பணியாற்ற வாய்ப்புள்ளதால் ஏழை மக்கள் பயனடைவார்கள். வெளிநாடுகளில் இருந்து சிகிச்சை பெற விரும்புபவர்கள் இந்தியாவில் டெல்லி, மும்பை நகரங்களுக்கு சென்று வந்த நிலை மாறி, இனி மதுரைக்கு வந்து சிறப்பு சிகிச்சை பெற வாய்ப்புள்ளது.

நோய் தடுப்பு முறைகளை மற்ற மக்களுக்கு விவரித்து அதன் மூலம் சமுதாயத்துக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவார்கள். வரும் முன் காப்போம் என்ற முறைபடி 40 வயதுக்கு மேற்பட்ட ஆண் மற்றும் பெண்களுக்கு குறைந்த செலவில் மருத்துவ பரிசோதனைகளை அளித்து நோய் வரும் முன் தடுக்கலாம். வந்தாலும் ஆரம்ப நிலையில் கண்டுபிடித்து முழுமையாக குணமளிக்க முடியும்.

காப்பீடு திட்டங்கள் பல இருந்தாலும் இன்றும் நவீன மருத்துவம் ஏழை எளிய மக்களுக்கு கிடைப்பது அரிதாக இருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனை கண்டிப்பாக இந்த இடைவெளியை குறைக்கும். ஏழை எளிய மக்களுக்கு செலவில்லாமல் உயிர் காக்கும் சிகிச்சையை அளிக்கும் என நம்புகிறேன்.

ஆதலால் மக்களுக்கு உயரிய சேவையை உரிய நேரத்தில் செலவில்லாமல் அளிக்கும் எய்ம்ஸ் உயர்நிலை மருத்துவமனை தென்தமிழக மக்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாகும்.

- டாக்டர் அருள்ராஜ், தலைவர், காமன்வெல்த் மருத்துவ கழகம்

Next Story