முதல்-அமைச்சர் பதவி ஆசையில் மு.க.ஸ்டாலின் ஸ்ரீரங்கம் வந்தார் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


முதல்-அமைச்சர் பதவி ஆசையில் மு.க.ஸ்டாலின் ஸ்ரீரங்கம் வந்தார் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 24 Jun 2018 4:45 AM IST (Updated: 24 Jun 2018 12:17 AM IST)
t-max-icont-min-icon

முதல் - அமைச்சர் பதவி ஆசையில் தான் மு.க.ஸ்டாலின் ஸ்ரீரங்கம் வந்தார் என கரூரில், பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

கரூர்,

கரூரில் பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தனது அதிகாரம், ஆளுமை என்ன என்பது கவர்னருக்கு தெரியும். அந்தவகையில் தான் அவரது செயல்பாடு இருக்கிறது. ஒருவேளை அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக இருந்தால், அதை மாநில அரசு தான் செய்ய வேண்டும். மாநில அரசின் அதிகாரத்தில் தலையீடு இருக்கிறதா? என முதல்-அமைச்சர் உள்ளிட்டோர் தான் கூற வேண்டும்.

இதைவிடுத்து மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது. இதில் காழ்ப்புணர்ச்சி தான் இருக்கிறது. கவர்னர் நடவடிக்கையால் தமிழகத்தில் பிரச்சினை ஏதும் இல்லை. மாறாக ஆண்டுக்கு ரூ.1½ கோடியாக இருந்த கவர்னர் மாளிகையின் செலவை, அவர் ரூ.30 லட்சமாக குறைத்திருக்கிறார். மக்களின் வரிப்பணத்தை வீண் செலவு செய்யக்கூடாது என நினைப்பதிலேயே அவரது சேவை மனப்பாங்கு தெரிகிறது.

சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலை திட்டத்தில் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்காக, விவசாயிகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை மேலும் அதிகப்படுத்த வேண்டும். அவர்களது மனம் நோகாமல் நிலங்களை கையகப்படுத்த வேண்டும். எந்தவிதத்திலும் விவசாயிகளும், பெண்களும் கைது செய்யப்படக்கூடாது என்பதை தமிழக அரசுக்கு கோரிக்கையாக வைக்கிறேன். இந்த திட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதில் உள்ள தவறுகள் களையப்பட வேண்டும். அதற்காக திட்டமே வேண்டாம் என்று கூறக்கூடாது.

யாராக இருந்தாலும் இன்று கடவுளை நம்பி தான் ஆக வேண்டும். கோவிலுக்கு வந்து தான் ஆக வேண்டும். குமாரசாமி ஸ்ரீரங்கம் வந்து ரெங்கநாதரை தரிசனம் செய்ததால் கர்நாடக முதல்-மந்திரி ஆகிவிட்டார். ஒருவேளை ரெங்கநாதரை நம்பினால், குமார சாமிக்கு கொடுத்த அருளை தமக்கும் வழங்குவார் என்கிற நம்பிக்கையில், பதவி ஆசையில் தான் மு.க.ஸ்டாலின் ஸ்ரீரங்கத்திற்கு வந்திருக்கலாம். இந்து மத கடவுள் மீது அவருக்கு நம்பிக்கை வந்திருப்பதை பாராட்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story