1,500 டன் கந்தக அமிலம் அகற்றம்: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உயர்நிலை தொழில்நுட்ப குழு ஆய்வு கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


1,500 டன் கந்தக அமிலம் அகற்றம்: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உயர்நிலை தொழில்நுட்ப குழு ஆய்வு கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 24 Jun 2018 3:30 AM IST (Updated: 24 Jun 2018 12:22 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 1,500 டன் கந்தக அமிலம் அகற்றப்பட்டுள்ளது. ஆலையில் உயர்நிலை தொழில்நுட்ப சிறப்புக்குழு ஆய்வு செய்து வருவதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 1,500 டன் கந்தக அமிலம் அகற்றப்பட்டுள்ளது. ஆலையில் உயர்நிலை தொழில்நுட்ப சிறப்புக்குழு ஆய்வு செய்து வருவதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மாதம் 22–ந் தேதி கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் இருப்பு வைக்கப்பட்டு இருந்த கன்டெய்னரில் கசிவு ஏற்பட்டு இருப்பதாக புகார் எழுந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவின் பேரில் அதிகாரிகள் குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையில் அதிரடி சோதனை நடத்தினர்.

அமிலம் அகற்றும் பணி

ஆலையில் கந்தக அமிலம் வைக்கப்பட்டு இருந்த கன்டெய்னரில் கசிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது.

அதன்படி கடந்த 18–ந் தேதி முதல் கந்தக அமிலம் டேங்கர் லாரிகள் மூலம் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டன. இந்த பணி நேற்று 6–வது நாளாக நடந்தது.

1,500 டன்

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;–

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த வாரம் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு முடிவில் ஆலையில் கந்தக அமிலம் சேமித்து வைக்கப்பட்டு இருந்த கன்டெய்னரில் கசிவு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அமிலத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த பணி கடந்த திங்கட்கிழமை முதல் நடந்து வருகிறது. இப்போது வரை 85 டேங்கர் லாரிகள் மூலம் கந்தக அமிலம் வெளியேற்றப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட 1,500 டன் கந்தக அமிலம் ஆலையில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.

இன்று இரவுக்குள்...

நாளை (அதாவது இன்று) இரவுக்குள் முழுமையாக அமிலத்தை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆலையில் உள்ள மற்ற ரசாயனங்கள் வைக்கப்பட்டுள்ள கன்டெய்னர்களையும் கண்காணித்து வருகிறோம்.

இதற்காக ஒரு உயர்நிலை தொழில்நுட்ப சிறப்பு குழு அமைக்கப்பட்டு அந்த குழுவினர் முழுமையாக ஆய்வு மேற்கொண்டு உள்ளனர். அவர்களின் அறிக்கை முடிவின் படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.


Next Story